கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பூவலை கிராமத்தில், மயானத்துக்குச் செல்ல சாலை வசதி மற்றும் மயானத்தில் சுற்றுச்சுவர், எரிமேடை, தண்ணீர் வசதி இல்லாததால் இருளர் இன மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பூவலை கிராமம். சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இக்கிராமத்தின் ஒரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அறியாமை இருளில் மூழ்கியுள்ள இம்மக்கள், மீன் பிடித் தொழிலாளர்களாகவும், விவசாய கூலி தொழிலாளர்களாகவும், மாந்தோப்பு காவலர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இந்த இருளர் இன மக்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த 28 சென்ட் பரப்பளவிலான மயானம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஒருவரால் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது என, கூறப்படுகிறது. இதனால், பூவலை இருளர் இன மக்களில் யாராவது ஒருவர் உயிரிழந்தால், உடலை பல்வேறு இன்னலுக்கு இடையே மயானத்தில் புதைத்தல் மற்றும் எரியூட்டும் நிலை நீடித்து வந்தது.
இதுதொடர்பாக, இருளர் இன மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பில், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை, உயிரிழந்தவரின் உடலோடு போராட்டம் என பல போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதுதவிர இப்பிரச்சினை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், பூவலை கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 28 சென்ட் நிலம், இருளர் இன மக்களின் மயான நிலம் எனவும், மயானத்துக்கு செல்லும் வழி உட்பட, மயானத்தையொட்டியுள்ள சுமார் 4.70 ஏக்கர் நிலம் அனாதீனம் எனவும் அறிவித்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கடந்த 2021-ம் ஆண்டு பூவலைகிராமத்தில் உள்ள சம்பந்தப்பட்ட 28 சென்ட் நிலத்தை மயானம் எனவும், மயானத்தை ஒட்டியுள்ள, மயான பாதை உட்பட 4.70 ஏக்கர் நிலத்தைபுஞ்சை அனாதீனம் என, கும்மிடிப்பூண்டி வட்டம் மற்றும் பூவலை கிராம கணக்குகளில் உரிய மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த் துறையினர், ’சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுற்றுச் சுவரை அகற்றி, நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது’ என்ற எச்சரிக்கை பலகையும் வைத்தனர்.
பிறகு, கடந்த ஆண்டு ஜனவரியில், பூவலை கிராம இருளர் இன மக்களின் மயானத்துக்கு செல்ல சாலை மற்றும் மயானத்தில் சுற்றுச்சுவர், எரிமேடை, தண்ணீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும் இந்த அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பல்வேறு இன்னலுக்கு இருளர் மக்கள் ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, பூவலை கிராமத்தைச் சேர்ந்த மங்கம்மாள் கூறும்போது, ’’50 ஆண்டுகளுக்கும் மேலாக பூவலை கிராமத்தில் வசித்தும் இருளர் இன மக்கள், பல தலைமுறைகளாக இந்த மயானத்தில்தான், இளையவர்கள் உயிரிழந்தால் உடலை புதைத்தும், பெரியவர்கள் உயிரிழந்தால் எரித்தும் வந்தோம். இந்த நிலையில் எங்கள் மயானத்தையும், மயான வழியையும் ஒருவர் ஆக்கிரமித்து, அங்கு எங்களை செல்ல விடாமல் தடுத்தார்.
அதற்கு, நாங்கள் நடத்திய போராட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் மயானத்துக்கு செல்லும் சாலை மற்றும் அடிப்படை வசதிகளை செய்யாமல் உள்ளனர்’’ என்றார். இருளர் இன இளைஞரான சுப்பிரமணி கூறும் போது, ’’மயானம் எங்கள் வசம் வந்தாலும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததால் உடல்களை உரிய ஈமச்சடங்குகள் செய்து புதைக்கவோ, எரிக்கவோ முடியாத நிலை தொடர்கிறது ’’ என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருள் கூறும்போது, “ஊரக வளர்ச்சித் துறை இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இங்கு வசிக்கும் 100 இருளர் இன குடும்பங்களில், 50 குடும்பங்களுக்குதான் பட்டா உள்ளது.
ஆகவே, மற்றவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, பூவலை கிராம இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ், ஆதார் அட்டை வழங்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மயானம் மற்றும் மயான பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய்யான வழங்குகளை திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
இது குறித்து, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ’’பூவலை கிராமத்தில் இருளர் இன மக்களின் மயானத்தில் உரிய ஆய்வு செய்து, சாலை வசதி, எரிவாயு தகன மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.