சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முன் தினம் வரை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல இடங்களில் தினசரி 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வந்தது. நேற்று பகலில் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட சில கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்நிலையில் சென்னை மழை பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்ளைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நேற்றிரவு முதல் பெய்த கனமழையால் சென்னையில் 6 மரங்கள், 38 கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.
சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரை உடனடியாக மோட்டார்கள் மூலம் அகற்றி வருகிறோம். 22 சுரங்கப் பாதைகளில் ஒரு சுரங்கப் பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும்தான் தற்போது தண்ணீர் உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் இருந்தபடி மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் பணிகளை கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். பருவமழை மட்டுமின்றி இதுபோன்று திடீரென பெய்யும் மழையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது” என்று கூறினார்.