சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் ஆனி மாத பூஜைகளுக்காக கடந்த 14-ம் தேதி திறக்கப்பட்டது. வரும் 20-ம் தேதி இரவு 10 மணி வரை திருநடை திறந்திருக்கும். அதுவரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை மாதாந்திர பூஜையின்போது திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழுள்ள பிற கோயில்களின் ஊழியர்கள் தற்காலிகமாக ஐயப்ப சுவாமி கோயிலில் பணி அமர்த்தபடுவது வழக்கம். அந்த வகையில், ஏற்றுமானூர் வசுதேவபுரம் கோயில் ஊழியரான ரெஜிகுமார் என்பவர் சபரிமலையில் காணிக்கை எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். சபரிமலை ஐயப்ப சுவாமி சன்னிதி முன்பு உள்ள காணிக்கைப் பெட்டியில் போடப்படும் காணிக்கைகள், கன்வேயர் பெல்ட் மூலம் தனி அறைக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனி அறையில் தேவசம்போர்டு ஊழியர்கள் காணிக்கையை எண்ணிக் கணக்கிடுவார்கள்.
சில்லறைகள் தனியாகவும், ரூபாய் நோட்டுகள் தனியாகவும், தங்கம், வெள்ளி உள்ளிட்டப் பொருள்கள் தனித்தனியாகவும் பிரித்து கணக்கிடப்படுவது வழக்கம். கடந்த 16-ம் தேதி பக்தர் ஒருவர் காணிக்கையாக 11 கிராம் எடையுள்ள தங்க காப்பு ஒன்றை உண்டியலில் போட்டிருக்கிறார். அந்த தங்கக் காப்பு பணத்துடன் கன்வேயர் பெல்ட்டில் வந்திருக்கிறது. அதை மற்ற ஊழியர்கள் கவனிக்காத நிலையில், ரெஜிகுமார் எடுத்து மறைத்து வைத்திருக்கிறார். அந்தக் காட்சி தேவசம் விஜிலென்ஸின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
இதையடுத்து தேவசம்போர்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெஜிகுமாரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் திருடியதை ஒப்புக்கொள்ளவில்லை. அதே சமயம் அவரது அறையில் சோதனை நடத்தியபோது தலையணைக்கு அடியிலிருந்து 11 கிராம் தங்க வளையல் கண்டுபிடிக்கப்பட்டது. வளையலை மீட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள், ரெஜிகுமாரைப் பிடித்து பம்பைக்கு அழைத்துச் சென்று போலீஸ் வசம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.