`சிம்பு, தனுஷ் உட்பட 5 பேருக்கு ரெட் கார்டா?' – தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி பதில்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கலைவாணர் அரங்கில் நடந்த அதன் கூட்டத்தில் சங்கத்தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர்கள் தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ‘தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்துவரும் ஐந்து நடிகர்களை வைத்துப் படம் தொடங்குவதற்கு முன்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடர்புகொண்ட பிறகே ஒப்பந்தம் செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

யோகிபாபு

இப்படி ஒரு தீர்மானம் வெளியானதும், நடிகர்கள் சிம்பு, விஷால், தனுஷ், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா என இவர்கள் ஐந்து பேருக்கும் விரைவில் ரெட் கார்டு போடவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமியிடம் கேட்டேன்.

”நேற்று நடந்த பொதுக்குழுவின் அந்தத் தீர்மானம் மட்டுமல்ல, நிறைய தீர்மானங்கள் போட்டிருக்கோம் சார். 2021 -2022 ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வரவு – செலவுக் கணக்கிற்கு ஒப்புதல் பெறப்பட்டது. 2015 முதல் 2022 வரையில் வெளியான சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு மானியத்தொகை வழங்கிடவும், 2016 முதல் 2022 வரை வெளியான திரைப்படங்களின் நடிகர், நடிகை தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கிடவும் குழு அமைத்ததற்கு நன்றி தெரிவிச்சோம்.

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்சனை செய்து வரும் ஐந்து நடிகர்களை வைத்து படம் துவங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்ட பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும், அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது உண்மை. ஆனால், சமூக வலைதளங்களில் சொல்லப்படும் நடிகர்களின் பெயர்களில்லை. சிம்பு, விஷால் குறித்து கொஞ்ச நாள்களாகவே இணைய தளங்களில் அப்படிச் செய்தி வெளியாகிக்கொண்டிருப்பதால், அவர்களையும் இணைத்திருக்கிறார்கள். நடிகர்களின் பெயர்களைச் சொல்லிவிடுவோம். ஆனால், எல்லா நடிகர்களுமே படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றனர். பெயர் சொல்லிவிட்டால் அந்தத் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு பாதிப்பு ஆகும் என்றுதான் சொல்லாமல் விட்டோம். ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காத நடிகர்கள் பிரச்னை நிறையவே இருக்கிறது.

முரளி ராமசாமி

இந்த விவகாரம் நடிகர்கள் சங்கத்தினருக்கும் தெரியும். எங்கள் பொதுக்குழுவில் குறிப்பிட்டதுபோல ஐந்து நடிகர்கள் மட்டுமல்ல. அதற்கு மேலாகவே நடிகர்களின் எண்ணிக்கை உள்ளது. இது குறித்துத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கத்தினருடன் பேச்சு நடத்த உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், முழு ஒத்துழைப்பு நல்கும்னு சொல்லியிருக்கார். அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதால், அவர் வந்த பின் பேசிவிடலாம் என்றிருக்கிறார். பேச்சு வார்த்தைக்குப் பிறகும் பிரச்னைக்கு முடிவு எட்டாமல் இருந்தால், பின்னர் பெயர்களை அறிவிப்போம்.

இதைப் போல, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிவிட்டு, படப்பிடிப்பு மற்றும் டப்பிங்கிற்கு வராமல் இழுத்தடிக்கும் நடிகர்களின் பிரச்னையை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வந்துதான் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

சம்பந்தப்பட நடிகர்களும், தயாரிப்பாளர்களும் நேரடியாகப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவதையும் வரவேற்கிறோம். தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு நலனுக்காகத்தான் இப்படி ஒரு தீர்மானம் போட்டிருக்கோம். திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் என்பவர் முதலாளிக்கு சமம். அந்த முதலாளியை அவமதித்தும் குளறுபடி செய்யும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்பதில் உறுதியா இருப்போம்.

அதைப் போல திரைப்படம் வெளியான அன்றைய தினமே திரைப்படங்களின் விமர்சனங்களை மோசமாக ஒளிபரப்பு செய்யும் நபர்கள்மீது கண்டிப்பாக தொழில் ரீதியாகவும் சட்டரீதியாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கோம். மேலும், அதைத் திரையரங்கு உரிமையாளர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்று கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கலைஞர் கருணாநிதி

20 வருடங்களாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினை பதிவுத் துறையில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்களுக்கும் நன்றி தெரிவிச்சோம். தவிர, கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றான்டு விழாவை கலை நிகழ்ச்சி நடத்திச் சிறப்பாக்கிடவும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது” என்கிறார் முரளி ராமசாமி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.