சுகாதாரத்துறை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருத்துவ வழங்கற் பிரிவு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம், ஆயுர்வேதத் திணைக்களம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் மருந்து விநியோகத்தின் போதான சவால்கள், வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகள், மருந்துப்பொருட்களின் தர உத்தரவாதம், மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதன் அவசியம், மருந்துகளின் பற்றாக்குறை, ஆயுர்வேத திணைக்களத்தில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகள் முன்வைப்புக்களை (Presentation) மேற்கொண்டனர். அத்துடன் பாரம்பரிய மருத்துவ முறையின் ஊடாக இலங்கையில் சுகாதார சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக காணப்படும் சந்தர்ப்பங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன், 96 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் (SPMC) உற்பத்தி செய்யப்படுகின்றமை, 2022 இல் 9 புதிய மருந்து வகைகள் வெளியிடப்பட்டுள்ளமை மற்றும் மேலும் 20 புதிய மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை தொடர்பில் இதன்போது தெரிவிக்கப்பட்டது. மேலும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மேலதிக மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ராஜித சேனாரத்ன, கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ லலித் வர்ணகுமார, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ சமனப்பிரிய ஹேரத், கௌரவ இம்ரான் மஹ்ரூப், கௌரவ முதிதா பிரிஷாந்தி மற்றும் கௌரவ ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.