தஞ்சாவூரில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீஸ்காரர் ஒருவரை, மது போதையிலிருந்த இரண்டு பேர் தகாதவார்த்தைகளில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூல வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வழக்கில் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் ஆயுதப்படைக் காவலர் காட்டுராஜா நேற்று முன்தினம், வழக்கம்போல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது வேகமாக வந்த ஒரு காரை சோதனை செய்வதற்காக நிறுத்தியிருக்கிறார். ஆனால் காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதையடுத்து தன் டூவீலரில் விரட்டிச் சென்று சிங்கப்பெருமாள் குளம் அருகே காரை மறித்து நிறுத்தியிருக்கிறார் காட்டுராஜா.
அப்போது, `போலீஸ் நிப்பாட்டச் சொன்னா நிப்பாட்ட மாட்டீங்களா?’ என காட்டுராஜா கேட்டிருக்கிறார். காரிலிருந்து கோபமாக இரண்டு பேர் இறங்கியிருக்கின்றனர். அதில் ஒருவர் காவலரிடம், `பத்து ரூபாய் வாங்கினாரே செந்தில் பாலாஜி அது தெரியாதா?’ எனக் கேட்டிருக்கிறார். பின்னர், உடன் வந்தவரை `காரை எடுங்கப் போவோம்…’ என்று கத்தியிருக்கிறார்.
காரில் ஏறச் சென்றவர்களை, `ஓய்’ எனக் காவலர் கூப்பிட, `நீ எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய், நான் எவ்வளவு சம்பாதிக்குறேன் தெரியுமா… ஓய் என்கிறாய்?’ எனக் கேட்டு, இருவரும் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கின்றனர். அதற்கு காவலர் காட்டுராஜா, `மரியாதையாகப் பேசுங்க’ எனச் சொல்ல, `உனக்கு என்ன மரியாதை…’ என காதில் கேட்க முடியாத அளவுக்கு, கடுமையான சொற்களால் திட்டியிருக்கின்றனர்.
`நீ அரசு சப்போர்ட்ல பேசுற, யூனிஃபார்மைக் கழட்டிட்டு வா…’ எனக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிச் சென்றனர். இருவரும் மது போதையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கடமையைச் செய்த போலீஸை மிக தரக்குறைவாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் பேசிய வீடியோவை ஆதாரமாக வைத்து காட்டுராஜா தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவுசெய்து, இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணை நடத்தினார். இதில், சேவப்பநாயக்கன்வாரிப் பகுதியில் கேட்டரிங் சென்டர் நடத்தி வரும் ஹரிதாஸ் (44), அவருடைய நண்பரான ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த காரல்மார்க்ஸ் (வயது 44) ஆகிய இருவரும்தான் குடிபோதையில் இவ்வாறு நடந்துகொண்டது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களைச் சிறையிலடைத்தனர்.