புதுடெல்லி: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:
மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில் கதை சொல்லுதல் குறித்து விவாதித்திருந்தோம். அந்த நிகழ்ச்சியால் உத்வேகம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் ஆனந்தாசங்கர் ஜெயந்த், குழந்தைகளுக்காக பல்வேறு கதைகளை தொகுத்துள்ளார். இதன்மூலம் நமதுநாட்டின் கலாச்சாரம் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படும்.
கதைகளின் சில சுவாரசியமான காணொலிகளையும் அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறார். தனது திறமையால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஆனந்தா சங்கர் ஜெயந்த் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
மழைக்காலம் என்பதால் அளவோடு சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். நாள்தோறும் யோகாசனம் செய்யுங்கள். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மாணவ, மாணவிகள் வீட்டுப்பாடத்தை குறித்த நேரத்தில் நிறைவு செய்யுங்கள், இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஆனந்தா சங்கர்
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆனந்தா சங்கர் ஜெயந்த் (61). பரதநாட்டியம், குச்சிப்புடி நடனக் கலைஞர். தெற்கு மத்திய ரயில்வேயின் போக்குவரத்து சேவை முதல் பெண் அதிகாரி என பல்வேறு முகங்கள் கொண்ட இவர் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் குட்டி கதைகள் என்ற பெயரில் வீடியோ தொகுப்பை வெளியிட்டார். 6 முதல் 13 வயது குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட வீடியோ தொகுப்பில் ஒவ்வொரு வீடியோவும் 5 நிமிடங்கள் ஓடக்கூடியது. இது குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்காக ஆனந்தா சங்கர் ஜெயந்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.