தயாரிப்பாளர்களை அவமதிக்கும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் : பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஜி.எம்.தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

20 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தை, பதிவுத்துறையில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிகொள்ள கருணாநிதி முதல்அமைச்சராக இருந்தபோது பையனூரில் இடம் வழங்கப்பட்டது. அதனை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்படும்.

2013 – 2014ம் ஆண்டுகளில் மானியத்தொகைக்காக விண்ணப்பித்த திரைப்படங்களில் விடுபட்ட திரைப்படங்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசின் கொண்டு செல்லப்படும்.

தயாரிப்பாளர்களை அவமதிக்கும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது.

திரைப்படம் வெளியான அன்றைய தினமே திரைப்படங்களின் விமர்சனங்களை மோசமாக ஒளிபரப்பு செய்யும் நபர்கள் மீது கண்டிப்பாக தொழில் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும்.

தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்து வரும் 5 நடிகர்களை வைத்து படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்ட பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.