தொடர் மழையால் சென்னை – கோவை செல்லும் விமான சேவை பாதிப்பு.!!
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து கீழே விழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. கேழே விழுந்துள்ள மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த கனமழையால் கோவை – சென்னை விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வழக்கமாக இன்று காலை 6.30 மணிக்கு கோவையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. மேலும், 11 மணிக்கு செல்லும் விமானம் 12.30 மணிக்கு தாமதமாக சென்றது.
இதைத்தொடர்ந்து, 2 மற்றும் 5.30 மணிக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 30 நிமிடங்கள் தாமதாக சென்றது. இரவு 7.30 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும், கடைசி விமானமும் தாமதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.