“பாட்டு எழுத மாட்டேன்னு அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்திருக்கேன்" – கார்த்திக் நேத்தா நேர்காணல்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் ‘பாட்டுத் தலைவன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல் எழுதும் அனுபவங்களையும், பல சுவாரஸ்யத் தகவல்களையும் பகிர்ந்துகொண்டார், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.

முதன் முறையாக சென்னைக்கு வந்த பயணம் எப்படி இருந்தது?

அது ரொம்பவே தமாஸா இருக்கும். சினிமாவுக்குத்தான் போகணும்னு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே முடிவு பண்ணிட்டேன். தினத்தந்தி நாளிதழில் வர்ற ‘குருவியார்’ பதில்களுக்குக் கவிதைகள் எழுதி எழுதி அனுப்பினேன். அதோட சேர்த்து 15-20 முகவரிகள் வாங்கி வச்சிருந்தேன். அப்போ நோட்டுல சின்னச் சின்ன கவிதைகள் எழுதியிருந்தேன். சென்னைக்குக் கிளம்பவும் ரெடியா இருந்தேன். அப்போ, முதன் முதல்ல S.A.ராஜ்குமார் சாரைப் பார்க்கணும்னுதான் ஆசை.

கார்த்திக் நேத்தா

”2000 வாக்குல, அவரோட பாடல்கள்தான் ரொம்பப் பிரபலமா இருந்துச்சு. ஒன்பதாவது படிக்கும்போதே, வீட்டுல இருந்து ஓடி வந்துட்டேன். ‘சினிமாவுக்குப் போறோம், போய்ப் பாட்டு எழுதுறோம்’ – இதுதான் எனக்குள்ள ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஒரு கனவோடதான் சென்னைக்கு வந்தேன். சேலத்துல இருந்து சென்னைக்கு வரும்போது, வைரமுத்து சாரோட ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ புத்தகத்தைப் படிச்சிட்டே வந்தேன். சென்னைக்கு வந்த பிறகுதான், ரியாலிட்டினா என்னன்னு புரிஞ்சது. திரும்பி ஊருக்குப் போனதுதான் மிச்சம்.” 

ஜிப்ரான் இசையில், “என் தாரா, என் தாரா! நீயே என் தாரா!”  பாடல் எழுதிய அனுபவம் பற்றிச் சொல்லுங்க?

”ஜிப்ரான் அண்ணவோட பயணத்துல, ‘அவர் ஒரு இசையமைப்பாளர், நான் ஒரு பாடலாசிரியர்’ இதையெல்லாம் தாண்டி ஒரு அண்ணன்-தம்பி என்கிற உறவு உருவாகிடுச்சு. இதனுடைய வெளிப்பாடுதான் இந்தப் பாட்டு. அவர், சூஃபி இசையை சினிமாக்குள்ள கொடுக்கணும்னு ரொம்பவே முயற்சி பண்ணுறாரு. என்னைப் பொறுத்தவரைக்கும், தமிழ் மொழியில இருக்கக்கூடிய குறிப்புப் பொருள், படிமம், குறியீடு இதெல்லாம் பாடல்கள்ல தரணும்னு ஆசை. அதற்கான வாய்ப்பா இந்தப் பாட்டு அமைஞ்சது. இந்த ட்யூனைக் கேட்ட உடனேயே, இது வேற மாதிரிதான் வரும்னு முடிவாகிடுச்சு.

கார்த்திக் நேத்தா

நம்மளோட அனுபவத்துல இருந்துதான் பாடல் எழுதணும். அப்படி இல்லாத பாடல்கள், பாடல்களா இருக்க வாய்ப்பில்லை. நான் பெரும்பாலும் இப்படித்தான் செலக்ட் பண்ணி எழுதுவேன். நான் எழுதக்கூடிய பாடல்கள்ல என்னுடைய பார்வையும் அனுபவமும் இருக்கணும். இயக்குநர் ஒரு சிச்சுவேஷன் சொன்னாலும், அதை என்னோட பார்வையிலதான் பார்ப்பேன். அதுல அழகியல் தன்மையுடைய தமிழ் சொற்கள் பொதிந்திருக்கணும். நான் இதைத்தான் எதிர்பார்ப்பேன். அப்படி இல்லன்னா அவங்ககூட வொர்க் பண்ணவே மாட்டேன். பல இயக்குநர்கள் கிட்ட, பாட்டு எழுத மாட்டேன்னு அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்திருக்கேன்.” 

 ’96’ படத்துல வர்ற ‘The Life Of Ram’ பாட்டுக்கும், தெலுங்கு ரீமேக் ‘ஜானு’ படத்துல வர்ற ‘Journey’ பாட்டுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. இது எப்படி அமைஞ்சது? 

”இந்த ரெண்டு பாட்டுமே, என்னுடைய வாழ்க்கையில நடந்த மனமாற்றத்தின் பிரதிபலிப்புதான். ’96’ படம் எடுத்த காலகட்டத்தில் எனக்குள்ள இருந்த பார்வை, மனநிலை, மனதின் கொந்தளிப்பு, ஸ்டேட்மென்ட் இது எல்லாம் சேர்ந்ததுதான், ‘The Life of Ram’ பாட்டு. இந்தப் பாடல் முழுக்க அப்படித்தான் இருக்கும். அதற்குப் பிறகு மூணு வருஷம் கழிச்சுதான், ‘ஜானு’ படம் வருது. இந்த மூன்று வருட காலகட்டத்தில் எனக்குள்ள நடந்த அகமாற்றம் தான், ‘Journey’ பாட்டு. மொழி ரீதியாகவும், பக்குவம் ரீதியாகவும் பல மாற்றம் நடந்துச்சு.

கார்த்திக் நேத்தா

‘இந்த உலகத்தை நான் எப்படிப் பார்க்குறேன்’ என்பதிலிருந்து அணு அணுவாகக் கூடி வந்ததுதான், இந்தப் பாட்டுல பிரதிபலிக்கும். ஒட்டுமொத்த இந்தியாவும் சொல்லிக் கொடுத்த மெய்கள் எல்லாமே, ‘Journey’ பாட்டுல அப்படியே இருக்கும். உருவ வழிபாட்டிலிருந்து, மனசு வெளிவந்துகொண்டிருந்த காலகட்டம் அது. இன்னைக்கு உருவ வழிபாடு-ங்கிறது எனக்குள்ள குறைஞ்சிடுச்சு. ஜோதியைத்தான் கும்பிடுறேன். என்னுடைய பாடல்கள்ல பெரும்பாலும் ‘சுடர்-ஜோதி’ என்கிற வார்த்தை இருக்கும். மன ரீதியாக பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திடுச்சு. இந்த மாற்றங்கள் எல்லாம், பாடல்கள்ல பிரதிபலிச்சுட்டேதான் இருக்கு.” 

’96’ படத்துல பூனைகள் பத்தி அழகா எழுதிருந்தீங்க. “இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்…” இந்த வரிகள் பற்றிச் சொல்லுங்க?

”எனக்குப் பூனை ரொம்பப் பிடிக்கும். இதை வேணும்னே எழுதுறது இல்ல. அந்த மெட்டுக்குள்ள, ஏதோ ஒரு இடத்துல பிரதிபலிக்குது. பூனைக்கும் எனக்குமான உறவு பத்திச் சொல்லணும்னா, நான் எந்தப் பூனை வளர்த்தாலும் இறந்து போய்டும். இது ரொம்ப துக்கமான விஷயம். பூனைய பார்த்தாலே எனக்கு துக்கம்தான். அதை என்னால எதிர்கொள்ளவே முடியாது. பூனைய நேரடியா பார்க்கும்போது, ‘எப்டியும் போய்ச் சேரப் போற..!’ இப்படிதான் எனக்குத் தோணும். அதனாலயே பூனைகள் வளர்க்குறத மொத்தமா விட்டுட்டேன். இயக்குநர் பிரேம் அண்ணாவுக்கு, பூனை-ங்கிறது பிள்ளை மாதிரி. அவருக்கு, சில நேரங்கள்ல பூனையே அன்னையா மாறும்.

கார்த்திக் நேத்தா

சில நேரங்கள்ல எதிரியாவும் மாறும். எனக்குப் பூனைகள்னாலே துக்கமான காரியம்தான். பூனைகள், என் கைக்கு எட்டவே எட்டாத ஒரு கனவு அது. சரி, பாட்டுலயாவது இருக்கட்டும்னு எழுதுனது தான். ‘இந்தப் பூனை எல்லோருக்கும் சொந்தம்’ அப்படின்னு உள்ளுக்குள்ள தோணுனதுதான். அதுவும் பிளான் பண்ணி எழுதல. இப்பவும் வளர்க்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா, நாமே அதைக் கொன்னுடுறோம்னு தோணுது. கடைசி வரைக்கும் நான் எழுதுற பாடல்கள்ல, பூனையும் ஏதோ ஒரு வகையில வந்துட்டே தான் இருக்கும். என்னுடைய தொகுப்புகள்ல பூனைகள் பத்திக் கவிதைகள் நெறைய இருக்கும். என்னுடைய முதல் தொகுப்பின் தலைப்பு, ‘தொல்காப்பியனின் பூனை.’ அப்புறம் அதை மாத்திட்டேன்.”

இளம் இசையமைப்பாளர்களுடன் பயணிக்கும் அனுபவம் பற்றிச் சொல்லுங்க?

”கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், ஜிப்ரான் உள்ளிட்ட இளம் இசையமைப்பாளர்கள்கிட்ட ஒரு குவாலிட்டி இருக்கு. இவங்க எல்லோருமே என்னைய ஃப்ரீயா விட்டுடுவாங்க. எனக்கு இதுதான் வேணும், இந்த மாதிரிதான் எதிர்ப்பார்க்குறேன்னு இவங்க யாருமே சொன்னது இல்ல. ஜிப்ரான் அண்ணாவுல இருந்து, இதுவரைக்கும் யாருமே அப்படிச் சொன்னது இல்ல.

கார்த்திக் நேத்தா

கோவிந்த் வசந்தா, லிரிக்ஸ் பக்கமே வரமாட்டார். ஜஸ்டின் பிரபாகரனும் அப்படித்தான். எனக்கு அது புரியும். அந்த ட்யூன் என்ன மாதிரியான ஓசையைக் கேக்குதோ, அதை மட்டும்தான் எழுதுவேன். என்னோட ஓசையை அதுக்குள்ள போட மாட்டேன். இது கிட்டத்தட்ட அவங்களுக்கும் பிடிச்சுப்போயிடும். அந்த மெட்டு, ஒரு எமோஷனைச் சுமந்துகிட்டுதான் வருது. எனக்கு அது புரியும்.” 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.