புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜமியத் உலமா இ-இந்த் அமைப்பின் தலைவர் அர்ஷத் மதானி நேற்று கூறியதாவது:
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம். ஆனால், அதை எதிர்த்து தெருவில் இறங்கி போராட மாட்டோம். எங்கள் மதத்துக்கென தனி சட்டங்கள் சுமார் 1,300 ஆண்டுகளாக அமலில் உள்ளன. அதைப் பின்பற்றி நடப்போம். சுதந்திரத்துக்குப் பிறகு எந்த ஒரு அரசும் இதுபோன்ற சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கவில்லை. அது தேவையில்லை என நாங்கள் கருதுகிறோம்.
பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் பொதுவாக போராட்டங்கள் அதிக அளவில் நடைபெறும். இந்து, முஸ்லிம் இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். இதனால் தவறான உள்நோக்கம் கொண்டவர்களின் திட்டம் நிறைவேறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுபோல, “தேர்தலில் வெற்றி பெற பொது சிவில் சட்டத்தை ஒரு கருவியாக பாஜக பயன்படுத்தும்” என இத்தேஹாத்-இ-மில்லட் கவுன்சில் தலைவர் மவுலானா தவுகீர் ரஸா கான் தெரிவித்துள்ளார்.
அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “குரான் மற்றும் சுன்னாவை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் முஸ்லிம் தனிநபர் சட்டம். எனவே, இதில் மாற்றம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு கூட அதிகாரம் இல்லை. அரசோ அல்லது வேறு எந்த அமைப்போ முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் மாற்றம் செய்ய முயன்றால், சமுதாயத்தில் குழப்பமும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் ஏற்படும். இதற்கு தீர்வு காண எந்த அரசாலும் முடியாது” என கூறப்பட்டுள்ளது.