பொது சிவில் சட்டம் குறித்து கேட்ட செய்தியாளர்கள்.. பதிலளிக்காமல் நழுவிய நிதிஷ் குமார்.. என்னாச்சு?

பாட்னா: பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக்களை சட்ட ஆணையம் கேட்டுள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. இத்தகைய சூழலில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் பொது சிவில் சட்டம் குறித்த கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர்.

வரும் 2024 ஆம் ஆண்டு மே மாத கால கட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவேண்டும் என்ற வியூகம் வகுத்து வருகிறது.

அதேவேளையில், மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரளவேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான முன்னெடுப்புகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.

நழுவி ஓடிய நிதிஷ் குமார்: அந்த வகையில், வரும் 23 ஆம் தேதி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பக் கூடாது எனவும் தலைவர்களே நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத்தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது உள்ப பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகளை, கூட்டணியை ஒருங்கிணைப்பதில் படு பிசியாக இருக்கும் நிதிஷ்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிதிஷ் குமாரிடம், பொது சிவில் சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நிதிஷ் குமார், ” இன்றைக்கு தட்பவெப்ப நிலை கடுமையான சூடாக உள்ளது.. எல்லா விஷயங்கள் குறித்தும் பிறகு பேசுவோம்” எனக்கூறியபடி பதிலளிக்காமல் நழுவினார்.

பொது சிவில் சட்டம்: லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் திடீரென மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. தற்போது ஜூலை 14 வரை கருத்துகள் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய சட்ட ஆணையத்தின் இது தொடர்பான அறிவிப்பில், மதம் சார்ந்த அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக உள்ளது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் போது அனைத்து மக்களுக்குமான ஒரே சட்டமாக இருக்கும். சிறுபான்மையினருக்கான தனித்த சட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும். இது பெரும் குழப்பத்தை வழிவகுக்கும் என்பது பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பின் வாதமாக உள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்ட போது பதில் எதுவும் கூற மறுத்து இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக இது குறித்து பேசினால் கூட்டத்தில் முரண்பாடுகள் ஏற்படலாம் எனக்கருதியே நிதிஷ்குமார் தனது நிலைப்பாடு பற்றி கருத்து கூற மறுத்து இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.