இம்பால்: மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி, மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றியதற்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் பல இடங்களில் வீதி வீதியாக ரேடியோக்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குக்கி இன மோதல் ஒன்றரை மாதங்களாக நீடிக்கிறது. 40 நாட்களைக் கடந்தும் நீடிக்கும் வன்முறை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
மணிப்பூரில் உள்ள அகதி முகாம்கள், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். கிராமங்களை விட்டு கொத்து கொத்தாக மூட்டை முடிச்சுகளுடன் மலைகாடுகளின் உச்சி பகுதிகளுக்கு சென்று பதுங்குகிற அவலநிலையையும் மணிப்பூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் மத்திய பாஜக அரசு, மாநில பாஜக அரசு மேற்கொண்ட அமைதி முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வன்முறை, பாஜக பக்கம் திரும்பிவிட்டது. மத்திய, மாநில பாஜக அமைச்சர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. உள்ளூர் பாஜக அலுவலகங்களும் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன.
மணிப்பூர் வன்முறைகள் தொடரும் நிலையில் பிரதமர் மோடி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த உரையிலும் மணிப்பூர் வன்முறை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மணிப்பூரில் அமைதி திரும்பவும் வேண்டுகோள் விடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த மணிப்பூர் மக்கள், பிரதமர் மோடியின் மன்கிபாத் வானொலி உரையை புறக்கணித்தனர். அத்துடன் ரேடியோக்களை (வானொலி) வீதிகளில் போட்டு தீயிட்டு எரித்து பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர். மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.