ரெடியான அமைச்சர் தங்கம் தென்னரசு… தமிழகத்தின் மின்தேவையும், பருவமழை தீவிரமும்!

தென் தமிழகத்தில் ஜூன் 2வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழை காலங்களில் தடையற்ற மின் சேவையை வழங்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கான வேலைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் முடுக்கி விட்டுள்ளது.

செந்தில் பாலாஜி கைதை கொண்டாடும் திமுகவினர்_ Yuvaraja interview

செந்தில் பாலாஜிக்கு குறி

இதற்கிடையில் மின்சாரத்துறையை புரட்டி போடும் அளவிற்கு ஒரு விஷயம் அரங்கேறியது. அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, கைது, மருத்துவமனையில் அனுமதி, துறைகள் வேறு அமைச்சர்கள் வசம் ஒப்படைப்பு, இலாகா இல்லாத அமைச்சர் என அதிரடிகள் நடந்தன. தற்போது மின்சாரத்துறை ஆனது தங்கம் தென்னரசு வசம் இருக்கிறது.

தங்கம் தென்னரசு ஆய்வு

இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து தலைமை பொறியாளர்களுடன் இன்று (ஜூன் 19) ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகக் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், மேலாண்மை இயக்குநர் ரா.மணிவண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மின்சாரத் தேவை

இந்த ஆய்வு கூட்டத்தில், தமிழகத்தின் மின்தேவை குறித்து விரிவான ஆய்வு செய்தார். மேலும் அனல், புனல் மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யக்கூடிய மொத்த மின்சாரத்தின் அளவு, நடைபெற்று வரும் மின் உற்பத்தி திட்டங்கள் மற்றும் மின் தொடரமைப்பு திட்டங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மாநில மக்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தின் மொத்த தேவையினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பருவமழை முன்னெச்சரிக்கை

இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டமன்றத்தில் எரிசக்தித் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமின்றி மின்னகத்தின் சேவையை ஆய்வு செய்து, மின் நுகர்வோர்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய அறிவுறுத்தினார்.

எதிர்வரும் பருவமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள காணொலி மூலம் மண்டல தலைமை பொறியாளர்களை கேட்டுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக மின்னகத்தை நேரில் சென்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.