'லியோ' முதல் சிங்கிள் 'நா ரெடி' : எதற்கு ரெடி அரசியலுக்கா ?
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் கடந்த இரண்டு நாட்களாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் விஜய். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி அவர் பேசிய பேச்சுக்கள் தற்போது எதிர்ப்புகளையும், வரவேற்புகளையும் பெற்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜுன் 17ம் தேதி அந்த கல்வி உதவித் தொகை விழா நடப்பதற்கு முன்தினம் ஜுன் 16ம் தேதியன்று விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியானது. அந்த முதல் சிங்கள் பாடலின் ஆரம்ப வரிகள் 'நா ரெடி'. அந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்தபடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதால் பலரும் 'நா ரெடி' என்பதன் அர்த்தத்தை அதிகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
'நா ரெடி' என்று போஸ்டர் வெளியான மறுதினம் விழா ஒன்றை நடத்துகிறார் விஜய். அதில் அரசியல் தொடர்புடைய சில கருத்துக்களைப் பேசுகிறார். ஜுன் 22ம் தேதியன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அந்த முதல் சிங்கிள் வெளியாக உள்ளது. அந்தப் பாடலில் அரசியல் நுழைவு பற்றி அவர் ஏதும் வரிகளை வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அவர் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் நுழைவு பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிட உள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல சண்டை ஆரம்பமாகிவிட்டது. “#AdvHBDJokerVijay“ என்ற ஹேஷ்டேக்குடன் விஜய்க்கு எதிரான டிரெண்டிங்கை சிலர் ஆரம்பித்துள்ளனர். சமூக வலைத்தளங்களைப் பற்றியும் விஜய் அவருடைய பேச்சில் குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த மோதல் மீண்டும் தொடர்கிறது.