வந்தே பாரத்தை போன்ற வேகம்… `கே ரயில்' திட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அதிவேகமாகப் பயணிக்கும் ‘சில்வர் லைன்’ என்கிற ‘கே ரயில்’ திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் தொடங்கி காசர்கோடு வரை 529 கிலோ மீட்டர் தூரம் புதிய ஸ்டாண்டர்ட் கேஜ் ரயில் பாதை அமைத்து, 200 கிலோ மீட்டர் வேகத்தில் செமி ஹைஸ்பீட் ரயில் இயக்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

கே ரயிலுக்காக நடப்பட்ட எல்லைஎல்லை கற்களை பிடுங்கி போராட்டம்

காசர்கோட்டில் இருந்து தலைநகரான திருவனந்தபுரத்துக்கு இப்போது ரயிலில் பயணிக்க 12 மணி நேரம் ஆகிறது. இதே தொலைவை கே ரயிலில் நான்கு மணி நேரத்தில் சென்றுசேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 8 மணி நேர பயணம் மிச்சப்படும். ஒரு ரயிலில் 675 பயணிகள் பயணிக்கலாம்.

திருவனந்தபுரம், கொல்லம், செங்கன்னூர், கோட்டயம், எர்ணாகுளம், கொச்சி ஏர்போர்ட், திருச்சூர், திரூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 நிறுத்தங்களில் நின்று செல்லும்.

கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில், 11 மாவட்டங்கள் வழியாக இந்த ரயில் பயணிக்கும். 20 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டு நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிக்காக 63,941 கோடி ரூபாய் செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கே ரயில் திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. பல தனியார் நிலங்களில் கே ரயில் திட்டத்துக்கான எல்லைத் தூண்கள் நாட்டப்பட்டன. அந்தக் கற்களை மக்கள் அகற்றிப் போராட்டம் நடத்தினர்.

திருவனந்தபுரம் மங்களாபுரத்தில் `கே ரயில்’ திட்டத்துக்கு எல்லைக்கல் போட எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது போலீஸார் தடியடின் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கேரள மாநில அரசாங்கம், கே ரயில் திட்டம் குறித்து அரசு எதுவும் பேசாமல் இருந்தது. இந்த நிலையில், கே ரயில் திட்டத்தை செயல்படுத்துவோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் அறிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாரம் ஒருமுறை நடக்கும் ‘நாம் முன்னோட்டு’ (நாம் முன்னேற்ற பாதையில்) என்கிற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “வந்தே பாரத் ரயில் கேரளாவில் ஓடியதை பார்த்த பிறகு `கே ரயில்’ நிச்சயம் தேவை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கே ரயில் திட்டத்துக்கு மத்திய அரசுதான் அனுமதி வழங்க வேண்டும்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சரிடம் கே ரயில் திட்டத்துக்கான ஃபைல்கள் குளோஸ் செய்யப்பட்டுவிட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘இல்லை, அதுகுறித்து விவாதிக்கப்படும்’ எனவும் ரயில்வே அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவுக்கு கேரளா வந்திருந்த ரயில்வே அமைச்சரிடம் கே ரயில் திட்டம் குறித்து பேசினேன். டெல்லிக்கு வரும்போது அதுபற்றி விவாதிக்கலாமா எனக் கேட்டேன். வெளிநாட்டு பயணம் காரணமாக பின்னர் விவாதிக்கலாம் என கூறினார். கேரளாவுக்கு வந்து கே ரயில் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

அரசுக்கு இந்த சமூகத்தின் மீதான பொறுப்பு அதிகமாக உண்டு. சமூகத்தின் விருப்பத்துக்கு உறுதுணையாகத்தான் மாநில அரசு நிற்கிறது.

கே ரயில் திட்டம் மக்கள் மனதில் இருந்து இன்னும் மறையவில்லை. கே ரயில் திட்டம் மிகவும் அவசியமானது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் காணமுடிகிறது. அதனால்தான் இந்தத் திட்டத்துக்கு சாதகமான கருத்தை மத்திய அரசு கூறி வருகிறது. இன்று இல்லை என்றால் நாளை இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கவேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும்” என்றார்.

கே ரயில் திட்டம் பற்றி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதே முக்கியமான விஷயம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.