13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஜூன் 19) பெரும்பாலான இடங்களிலும், 20, 21, 22-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 18 (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 4 செ.மீ., கோவை மாவட்டம் சின்னகல்லாறு, சின்கோனாவில் 2 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறு, வால்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், கெலவரப்பள்ளி அணை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, தேனி மாவட்டம் மஞ்சளாறு ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதேபோல, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.