‘3-வது முறையாக ஐமுகூ ஆட்சி அமைக்க வாய்ப்பு’ – கபில் சிபல் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினை

புதுடெல்லி: சித்தாந்த ரீதியாக ஒன்றிணைந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கபில் சிபல் தெரிவித்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணீஷ் திவாரி, பிரமோத் திவாரி ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

கபில் சிபல் கருத்து: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பின்னர் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. மாறாக, அவர் நிலைநாட்ட விரும்பும் சித்தாந்தத்துக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளுக்கு பொதுவான நோக்கம், அதைப் பிரதிபலிக்கும் வகையிலான செயல்பாடுகள், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகிய 3 பண்புகள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் எதிர்வினை: இந்தக் கருத்து குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பஞ்சாப் மாநிலத்தின் ஆனந்த்பூர் சாஹிப் தொகுதி மக்களவை உறுப்பினருமான மணீஷ் திவாரி கூறுகையில், “எதிர்க்கட்சிகளால் நாட்டுக்கு ஒரு மாற்றத்தை தர முடியம். எனவே, சித்தந்தம் மற்றம் மதிப்புகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை இருக்க வேண்டியது அவசியம். எதிர்க்கட்சிகளால் ஒன்றிணைய முடியாது, அவர்களுக்குள் பிளவு இருக்கிறது என்று கூறுவது அடிப்படையில்லாத வாதம். சித்தாந்தங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 3-வது முறையாக யுபிஏ ஆட்சி அமைவது உறுதி” என்று தெரித்துள்ளார்.

மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி, “நாட்டில் இரண்டு கூட்டணிகள் உள்ளன. ஒன்று மகாத்மா காந்தியை நம்புகிறது. மற்றொன்று கோட்சேவை. எனவே 2024 தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். நாங்கள் இன்று ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற ஒன்றிணைந்துள்ளோம்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நாட்டின் பிற பகுதிகளையும் மணிப்பூர் போல ஆக்கி, மதம் மற்றும் சாதியின் பெயரால் அமைதியில்லாத நிலையை உருவாக்கிவிடுவார்கள். எனவே, பாஜகவுக்கு எதிராக கூட்டணி உருவாக்குவது முக்கியம். பெயரில் (பிரதமர் முகம்) என்ன இருக்கிறது. சித்தாந்தம் ஒன்றாக இருக்கவேண்டும் அதுதான் முக்கியம்” என்று தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பின்னணி: கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைமையில் இந்தக் கூட்டணி உருவாகியது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில், மன்மோகன் சிங்கை பிரதமராக கொண்டு இக்கூட்டணி 2004 – 2009 மற்றும் 2009 – 2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்தது.

தற்போது ஏழு மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதில் சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பிஹார் (ஐக்கிய ஜனதளம்), ஜார்க்கண்ட் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) தமிழ்நாடு (திராவிட முன்னேற்ற கழகம்) ஆகிய மூன்று மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியும் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.