500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: அமைச்சர் கொடுத்த அப்டேட்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. அதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். அத்துடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

இதற்கிடையே அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதால் அவர் வகித்த மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக மதுவிலக்குத்துறையை வழிநடத்தி வரும் முத்துச்சாமி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக பேசியுள்ளார்.

ஈரோட்டில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரவேண்டி இலக்கு நிர்ணயிப்பதில்லை. டாஸ்மாக்கில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து சரி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்படும். எங்கோ ஓரிரு இடங்களில் தெரியாமல் நடந்துள்ள சிறிய பிரச்சினைகளை கூட அரசியல் காரணங்களுக்காக பூதாகரமாக்கி கூறி வருகின்றனர்” என்றார்.

மேலும் அவர், “அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 800 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் சோதனை முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்தில் முழுமையாக நிலத்தைக் கையகப்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு விட்டுச் சென்றுவிட்டது. அதை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளிடம் பேசி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

சில இடங்களில் பைப்புகள் மற்றும் தண்ணீர் அளவிடும் கருவி திருட்டுப்போய் உள்ளது. பணிகள் முடிவடைந்ததும், காவலர்கள் நியமிக்கப்பட்டு, அத்தகைய திருட்டுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.