சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படத்தின் காரணமாக இந்திய படங்களுக்கு காத்மண்டூவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில் அயோத்தி ராம ஜென்ம பூமி தலைமை அர்ச்சகர் உள்ளிட்டோர் ஆதிபுருஷை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரபாஸ் நடித்திருக்கும் ஆதிபுருஷ் படம் பான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அந்தத் திரைப்படம் வெளியானது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் அப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைஃப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
நெகட்டிவ் விமர்சனம்: ட்ரெய்லருக்கும், டீசருக்கும் கிடைத்த ட்ரோல்களை கடந்து பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானது. ரசிகர்களும் ஆவலோடு படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு சென்றனர். ஆனால் படத்தின் பின்னணி இசையும் சில காட்சிகளும் மட்டும்தான் நன்றாக இருக்கிறது. மாறாக கிராஃபிக்ஸ் காட்சிகளோ கார்ட்டூன் கிராஃபிக்ஸை விட மட்டமாக இருப்பதாக ரசிகர்கள் பெரும்பாலானோர் கூறினர்.
பாக்ஸ் ஆபிஸ்: பிரபாஸுக்கு அதிக மவுசு இருக்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் படத்துக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவை தவிர சில வடமாநிலங்களும் டீசண்ட்டான ரெஸ்பான்ஸை கொடுத்தனர். ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதிபுருஷ் திரையிடப்பட்ட திரையரங்குகள் பெரும்பாலும் காற்று வாங்கவே செய்தன. இருப்பினும் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியிருக்கும் சூழலில் வசூல் 300 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
சர்ச்சைக்குரிய வசனம்: இந்தச் சூழலில் படத்தில் ராவணன் பற்றி அனுமன் பேசும் வசனம், சீதை பாரதத்தின் புதல்வி போன்ற வசனங்கள் சர்ச்சையை கிளப்பின. குறிப்பாக சீதை பற்றிய வசனத்துக்கு நேபாளம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் ராவணன் பற்றி பேசும் அனுமன் பேசும் வசனத்தை மாற்றியமைப்பதாகவும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடரும் சர்ச்சை: இந்நிலையில் ஆதிபுருஷ் படத்துக்கு நேபாளம் தலைநகர் காதமண்டூவில் தடை விதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி பிற இந்திய படங்களும் இனி திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காத்மண்டு மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “குறிப்பிட்ட உரையாடலை (சீதை பற்றிய வசனம்) நீக்காமல் படத்தை திரையிடுவது சரி செய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தும்.
அதை மீறி திரையிட்டால் நேபாளத்தின் தேசியம், கலாசாரம், ஒற்றுமைக்கு சீர் செய்ய முடியாத சேதம் உருவாகலாம். எனவே தலைநகரில் இருக்கும் 17 திரையரங்குகளிலும் ஆதிபுருஷ் மட்டுமின்றி அனைத்து இந்திய திரைப்படங்களையும் திரையிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் முன்வந்திருக்கிறார்கள்” என்றார்.
அயோத்தி அர்ச்சகர் கோரிக்கை: நேபாளத்தில் நிலைமை இப்படி இருக்க இந்தியாவிலும் ஆதிபுருஷுக்கு எதிராக எதிர்ப்பு கொடி உயர்ந்துள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமியின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், அயோத்தி துறவி மணிராம் தாஸ், அனுமன் கர்ஹி கோயில் அர்ச்சகர் ராஜு தாஸ் உள்ளிட்டோர் ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டுமென கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். இதற்கிடையே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.