புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ‘நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது உள்ளிட்ட எதிர்கால திட்டங்களில் இந்தியா இணைய வேண்டும்’ என, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’வின் மூத்த விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு நாளை செல்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளார். மோடியின் இந்தப் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் தொழில்நுட்பம், கொள்கை மற்றும் திட்டங்கள் பிரிவின் நிர்வாகியாக உள்ள இந்திய வம்சாவளியான பாவ்யா லால் கூறியுள்ளதாவது:
வரும், 2025ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு பயணம் என, பல திட்டங்கள் உள்ளன.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, ‘ஆர்டிமிஸ்’ ஒப்பந்தத்தில், இதுவரை, 25 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியாவும் இணைய வேண்டும் என, நாசா விரும்புகிறது.
நிலவுக்கு விண்கலம் அனுப்ப, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.
விண்வெளி துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு பெரிய வாய்ப்புகள் உள்ளன. மோடியின் பயணத்தில் இதற்கான முயற்சி எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாசாவின் முன்னாள் நிர்வாகியான மைக் கோல்டும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement