புதுடில்லி,இந்தியாவால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியும், காலிஸ்தான் புலிப்படை தலைவருமான ஹர்தீப் நிஜ்ஜார், 46, கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தின் பர்சிங்புர் கிராமத்தைச் சேர்ந்த ஹர்தீப் நிஜ்ஜார் மீது, 2021ல், அதே பகுதியைச் சேர்ந்த ஹிந்து பூசாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது உட்பட நான்கு வழக்குகள் உள்ளன.
இவற்றை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, ‘ஹர்தீப் நிஜ்ஜார் குறித்து தகவல் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும்’ என, கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்தது.
வட அமெரிக்க நாடான கனடாவுக்கு தப்பிச் சென்ற ஹர்தீப் நிஜ்ஜார், மற்றொரு காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுான் நடத்தும், ‘சீக்கியருக்கான நீதி’ என்ற அமைப்பின் கனடா பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
காலிஸ்தான் அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து வந்த ஹர்தீப் நிஜ்ஜார், கனடாவில் உள்ள நம் நாட்டு துாதரகங்களில் நடந்த தாக்குதல்களுக்கு மூளையாகவும் செயல்பட்டார்.
கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே நகரில் உள்ள குருத்வாராவின் தலைவராகவும் ஹர்தீப் நிஜ்ஜார் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், சர்ரே நகரில் உள்ள குருத்வாராவில், நேற்று முன்தினம் இரவு, வாகன நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த ஹர்தீப் நிஜ்ஜாரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காலியாகும் கூடாரம்
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நம் அண்டை நாடான பாக்., உட்பட உலகம் முழுதும் காலிஸ்தான் இயக்கங்களின் தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். முதலில், காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை, பஞ்சாபின் மோகா மாவட்டத்தில், போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.தொடர்ந்து, கடந்த மே மாதம், பாகிஸ்தானைச் சேர்ந்த 63 வயதான காலிஸ்தான் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின், லண்டனில் உள்ள நம் நாட்டு துாதரகத்தில், கடந்த மார்ச்சில் நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட காலிஸ்தான் தலைவர் அவதார் சிங் காந்தா, ரத்து புற்றுநோயால் உயிரிழந்தார். தற்போதைய நிலவரப்படி, சீக்கியருக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுான் மட்டும் செயல்பட்டு வருகிறார். அவரையும் கைது செய்ய, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்