சென்னை: Maamannan Trailer (மாமன்னன் ட்ரெய்லர்) மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் பத்து மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பின்னர் உதவி இயக்குநராக பல வருடங்கள் இருந்துவிட்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் அதிகார சாதிகளின் அட்டூழியங்களையும் காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்தார் மாரி. இதற்கிடையே அவர் மறக்கவே நினைக்கிறேன், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் உள்ளிட்ட புத்தகங்களையும் அவர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பரியேறும் பெருமாள் க்ளைமேக்ஸ் ஷாட்: முதல் படத்திலேயே தன்னை ஒரு தேர்ந்த படைப்பாளியாக பிரகடனப்படுத்திக்கொண்டார் மாரி செல்வராஜ். வசனங்களும், காட்சியமைப்புகளும், அவர் வைத்த குறியீடுகளும் அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்தது.குறிப்பாக க்ளைமேக்ஸில் அவர் எழுதியிருந்த வசனம், வைத்திருந்த ஷாட் தி பெஸ்ட் என கொண்டாடப்பட்டது. சாதாரண ஷாட்டாக அது தெரிந்தாலும் அந்த ஷாட்டுக்குள் இருந்த ஆழமும் அது தந்த அனுபவமும் அளப்பரியது என்றனர் ரசிகர்கள்.
கர்ணன்: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானது. இருந்தாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இதில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் படத்தை பலரும் கொண்டாடவே செய்தனர். இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.
உறுதிப்படுத்திய ட்ரெய்லர்: இந்தச் சூழலில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் கடந்த 16ஆம் தேதி வெளியானது. மாரி செல்வராஜ் தனது பேட்டியில் கூறியதுபோலவே ட்ரெய்லரில் வடிவேலுவின் நடிப்பு வித்தியாசமாகவே இருந்தது. மேலும் எளிய மக்களில் ஒருவர் அதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் மாமன்னன் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது உணர்ந்துகொள்ள முடிகிறது.
10 மில்லியன் பார்வைகள்: இந்நிலையில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி அந்த ட்ரெய்லரானது இதுவரை யூட்யூபில் பத்து மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. இதன் காரணமாக படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த எண்ணிக்கை மூலம் படத்துக்கு எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம் எனவும் திரை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். படமானது ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.