சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) மாமன்னன் படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் கமல் ஹாசனுக்கு மாரி செல்வராஜ் எழுதிய கடிதம் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டு தனது அனுபவத்தை கலந்து சினிமா செய்பவர் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாளில் அவரது ஒட்டுமொத்த வலியையும் ரசிகர்கள் உணரும்படி காட்சிகளை அமைத்திருந்தார். அதேபோல் அவரது இரண்டாவது படமான கர்ணனிலும் ரசிகர்களுக்கு ஒரு வலியை கடத்தினார். அந்த இரண்டு படங்களின் மூலமே மாரி செல்வராஜ் தமிழின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
மாமன்னன்: இந்தச் சூழலில் அவர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்கனவே அதிகரித்திருந்த சூழலில் மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜின் பேச்சில் ஒரு உக்கிரம் தெறித்தது.
இசக்கிதான் மாமன்னன்: ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரை வைத்துக்கொண்டு மாரி செல்வராஜ் தேவர் மகன் குறித்து பேசுகையில், “தேவர் மகன் படம் பார்த்து எனக்கு கொஞ்சம் மனப்பிறழ்வே வந்துவிட்டது. அது நல்ல படமா இல்லை கெட்ட படமா என்ற கேள்வி எனக்குள் எழுந்திருந்தது. அதுமட்டுமின்றி அது ஒரு படமாக ஒரு தளத்திலும், வேறு ஒரு விஷயமாக மற்றொரு தளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என இரண்டுமே இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தேவர் மகன் இசக்கி மாமன்னன் ஆனால் என்ன ஆகும் என்பதுதான் இந்தப் படம்” என பேசியிருந்தார்.
முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு: மாரி செல்வராஜின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பலரும் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர். குறிப்பாக தேவர் மகன் படம் சாதிக்கு எதிரானது என்ற ஒரு தரப்பினரிடம் பிம்பம் இருக்கிறது. ஆனால் படம் முழுக்க குறிப்பிட்ட சாதியின் பெருமையை பேசிவிட்டு படத்தின் கடைசியில் மட்டும் சாதிக்கு எதிராக வசனம் வைப்பதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது என கேள்வி கேட்டு மற்றொரு தரப்பினர் அந்த பிம்பத்தை உடைப்பதும் வழக்கமாக நடந்துவருகிறது.
இசக்கி: குறிப்பாக மாரி செல்வராஜ் பேசியபோது இசக்கிதான் மாமன்னன் என்று ஆணித்தரமாக சொல்லியிருப்பதன் மூலம் தேவர் மகனில் இசக்கி கதாபாத்திரத்தை கமல் ஹாசன் எப்படி வடிவமைத்திருக்கிறார் என்பதையும் சிலர் விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றனர். அதாவது, படம் முழுக்க அந்த இசக்கி கதாபாத்திரம் கமலுக்காக விஸ்வாசமாக இருந்து ஒரு கையை இழந்துவிடும். ஆனால் அந்த இசக்கிக்கு கமல் ஹாசன் படத்தில் என்ன செய்வார்.
போங்க போய் புள்ளைக்குட்டிய படிக்க வைங்க என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வார். அதோடு அவரது கடமை முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பும் சிலர்; அவர்களை அடிமைப்படுத்தாமல் இருந்திருந்தாலே இசக்கிகளும், அவர்களது தலைமுறையும் பள்ளிக்கு சென்றிருக்குமே என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். மேலும் தேவர் மகன் திரைப்படத்தின் பல காட்சிகளும், பாடலும் ஆதிக்க சாதியினருக்கு கொம்பு சீவிவிட்டது. இதன் காரணமாக பல பிரச்னைகள் ஏற்பட்டன என்றும் ஒரு பேச்சு உண்டு.
இசக்கிகள் மாமன்னர்களாக வர வேண்டும் என பல தலைமுறைகளாக காத்திருக்கிறார்கள். வர முயன்றாலும் அவர்கள் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதை காத்திரமாக கமல் ஹாசன் தேவர் மகனில் பேசவே இல்லை. அதை மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் மூலம் திரைவடிவமாக மாற்றியிருக்கிறார். தேவர் மகனுக்கு எதிர் சேவல்தான் மாமன்னன் என்ற கருத்தும் பெரும்பாலும் எழ ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம் மாரி செல்வராஜ் இப்போது இயக்குநராக மாறிவிட்டதால் அந்த தேவர் மகன் மீது இருக்கும் கோபத்தை ஒரு அளவோடு பாதுகாப்பான வார்த்தைகளை போட்டு ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் காண்பித்துவிட்டார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் ஏற்கனவே தேவர் மகன் தொடர்பாக கமல் ஹாசனுக்கு எழுதிய கடிதம் இப்போது திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அந்தக் கடிதத்தில் அவர், “நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு, ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்: வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு.
நீங்கள் பல பிரிவு மக்கள் பல அடுக்கு சாதி கூறுகளுடன் வாழும் நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை முறையை , அவங்க அரிவாள் பிடித்த முறையை ,அவர்கள் அரிசனனுக்கு சந்தோஷமாய் கூழ் ஊத்திய முறையை , மீசை முறுக்கி வளர்த்த முறையை , சாராயம் குடித்த முறையை , சக மனிதனின் சங்கறுத்த முறையை காட்டுகிறேன் என்று “தேவர் மகன் “என்ற தலைபோடு ஒரு திரைப்படம் எடுத்தது ஏன்?
ஒரு பிரிவு மக்களின் வன்முறையை ஆதிக்கத்தை அவர்களின் அறியாமையை காட்டி அவர்களை உசுப்பேத்திவிடவா இல்லை அவர்களின் சாதிய வேல்கம்புகளுக்கு கூர் தீட்டிவிடவா?
அல்லது எப்போதும்போல மீசை முறுக்க ஆசைபட்டு பணம் சம்பாதிக்கவா அது எப்படி “போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” இதன் விளைவையும் வலியையும் இன்றுவரை நீங்கள் உணர்ந்ததுண்டா…சொல்கிறேன் கேளுங்கள்
•ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட பள்ளிகளில் அடித்துக்கொண்டார்கள்,
•திருமண சடங்கு விசேச வீடுகளில் ஏன் கோவில்களில் கூட உங்களின் முற்போக்கு பாடல் ஒலித்து கிராமங்களின் ஒற்றுமையை ஆடவைத்தது.
•வெள்ளரிக்காய் விற்கும் வயதான மூதாட்டிக்கூட வலுகட்டாயமாக பாட வைக்கபட்டாள்.
•எங்களுக்கெதிரான உற்சாகத்துடன் மீசைகள் முறுக்கபட்டன
சண்டியர்னு பேர் வைத்தா கிருஷ்ணசாமி கோவித்துகொள்வார் என்று அதனால கிட்டிவாசல்னு பேரு வைக்கலாமென்றால் அதுக்கும் கோபித்துக்கொண்டால் என்ன பண்ணுவது.
எவ்வளவு அருவருப்பான ஆணவமான நாகரிகம் இல்லாத பதில். நீங்கள் மன்மதலீலை என்று பெயர் வைத்தற்கா அவர் எதிர்த்தார். நீங்கள் தேவர்மகன் என்று பெயர் வைத்தபோதுகூட யாரும் எதிர்க்கவில்லையே.. ஆனால் அதன் மூலம் வந்த விளைவும் ஏற்பட்ட வலியையும் பார்த்து பயந்து பெயரை மாற்றிகொள்ளுங்கள் என்று ஒரு ஒடுக்கபட்ட சமூக மக்களுக்காய் கேட்டதற்காய் இவ்வளவு கொச்சையான பதில் ..
இன்றைய சூழலில் கிராமப்புற பள்ளிகளில் உலவும் சாதியின் உருவம் உங்களுக்கு தெரியுமா …….பள்ளி பாடபுத்தகங்களில் முதல் அட்டையிலோ இல்லை வேறு பக்கங்களிலோ தலித் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் இருக்குமெனில் அவரது இரு கண்களும் பேனா முனைகளால் தோண்டி எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறதென்று……உங்களுக்கு தெரியுமா! அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பற்றிய கேள்வி வினாத்தாளில் கேட்டால்கூட அதற்கு பதில் எழுத விரும்பாமல் விட்டுவிட்டு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள் என்று,
• வெண்மனி
• கொடியன்குளம்
• மேலவளவு
• ஆழ்வார்கற்குளம்
• தாமிரபரணி இதையெல்லாம் கூட விட்டுவிடுங்கள் ஈழத்தில் உன் மொழி பேசும் உன் சகோதரன் கொத்து கொத்தாய் செத்து மடிந்தபோது என்ன செய்தீர்கள்
கொலைக்கு கொலைதான் தீர்வா குடிச்சுப்புட்டு தன் கவுரவத்துக்காக இருபதுபேர் சாக காரணமாக இருந்த விருமாண்டிக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது என்று சொன்ன நீங்கள் ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக அதன் சமூக நீதிக்காக அறியாமையின் காரணமாக வன்முறையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வை பனையமாக வைத்து பழிக்கு பழிவாங்கியவர்களை நீதிமன்றமே தண்டனை கொடுத்தாலும் அவர்களை கடத்தி வந்து குண்டு வைத்துதான் கொலை செய்ய வேண்டுமா?
கடைசியாக திரு. கமல் ஹாசன் அவர்களே ! நீங்கள் கருப்பு சட்டை அணிவதால் எங்களுக்கு மறந்துவிடும் என்று நினைக்காதீர்கள்… உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லாராலும் ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டீர்கள் அப்புறமென்ன நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் , பாதுகாப்பாய் இருப்பதற்கும் சகலகலாவல்லவனும் அவ்வைசண்முகியும் , தசாவதாரமும் போதுமே…
கமல் அவர்களே, உங்களுக்கு திரைக்கதை சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எங்கள் வாழ்வியலில் நாங்கள் வாழும் வாழ்க்கை முறை அசாதரமானது… என்பதை தயவுசெய்து கொஞ்சம் கருத்தில் வையுங்கள்…
இப்படிக்கு, இன்னும் சேரி என்ற சொல்லும் வாழ்வும் உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப்பையன்.. மாரி செல்வராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்தக் கடிதத்தை முகநூலில் பலர் பகிர்ந்துவருகின்றனர்.