சென்னை: எஸ்ஜே சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான பொம்மை படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா தற்போது வெரைட்டியான நடிகராக மிரட்டி வருகிறார்.
ஷங்கரின் இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் எஸ்ஜே சூர்யா இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணையும் எஸ்ஜே சூர்யா
அஜித்தின் வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா, இப்போது நடிகராக மிரட்டி வருகிறார். வாலி, குஷி என அடுத்தடுத்து அஜித், விஜய்யுடன் இணைந்த அவர், நியூ, அ.. ஆ படங்களை இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனாலும் ஷங்கரின் நண்பன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படங்களில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
அப்போது முதல் முழுநேர நடிகராக மாறிவிட்ட எஸ்ஜே சூர்யா, ஹீரோ, வில்லன், காமெடி, சைக்கோ கேரக்டர் என வெரைட்டியாக மாஸ் காட்டுகிறார். கடந்த இரண்டு வருடங்களில் மாநாடு, டான் போன்ற படங்களில் வில்லனாக நடித்து ஸ்கோர் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியன் 2, கேம் சேஞ்சர், மார்க் ஆண்டனி ஆகிய படங்களிலும் எஸ்ஜே சூர்யா தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடித்திருந்த பொம்மை திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ராதா மோகன் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். அதிக எதிர்பார்ப்பில் இருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முன்னதாக பொம்மை படத்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்துத் தெரிவித்திருதார்.
இதற்கெல்லாம் காரணம் உயர்ந்த மனிதன் திரைப்படம் தான் என சொல்லப்படுகிறது. கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் தான் உயர்ந்த மனிதன் படத்தை தொடங்கினார். எஸ்ஜே சூர்யா, அமிதாப் பச்சன் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, தமிழ், இந்தி மொழிகளில் உருவாகவிருந்தது. அதற்காக எஸ்ஜே சூர்யா, அமிதாப் பச்சன் இருவரும் நடித்த சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆனால் தயாரிப்பு தரப்புக்கும், அமிதாப்புக்கும் இடையே நடந்த கசப்பான சம்பவம் காரணமாக உயர்ந்த மனிதன் படம் ட்ராப் ஆனது.
அப்போது இந்த பிரச்சனை உண்மைதான் எனவும், மான்ஸ்டர் படப்பிடிப்பு முடிந்ததும் உயர்ந்த மனிதன் படம் மீண்டும் தொடங்கும் என எஸ்ஜே சூர்யா கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. இந்நிலையில், தற்போது உயர்ந்த மனிதன் படத்தை மீண்டும் தூசிதட்டி வருகிறாராம் எஸ்ஜே சூர்யா. இதனால் இந்தப் படத்தின் வேலைகள் திரும்ப ஆரம்பிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ரஜினியின் தலைவர் 170 படத்தில் அமிதாப் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.