புதுடெல்லி: அனல் காற்று வாட்டி வதைத்து வரும் உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் சுகாதார நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகிறது. இந்த 2 மாநிலங்களில் சுமார் 100 பேர் அனல் காற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அதிக வெயில், அனல் காற்றைச் சமாளிப்பது தொடர்பான உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
அப்போது உ.பி., பிஹார் மாநிலங்களில் அதிக அனல் காற்றுஇருப்பதால், அந்த மாநிலங்களில்சுகாதார நிபுணர்களை அனுப்பிவைத்து நிலைமையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை (ஐஎம்டி), தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் (என்டிஎம்ஏ) ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உ.பி., பிஹார் மற்றும் அதிக வெயில் உள்ள மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு நடத்துவர்.
மேலும் அனல் காற்றின் பாதிப்பால் ஏற்படும் பிரச்சினைகளை மக்களிடம் அவர்கள் கேட்டறிவர். அவர்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்ததும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். கோடை காலத்தை முன்னிட்டு, அனல் காற்றால் ஏற்படும் பிரச்சினைகள், நோய்களுக்கு தீர்வுகாண, மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.