இன்றும் ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்… காரணம் இதானாம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் முதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் இதய ரத்தக் குழாய்களில் 3 ஆபத்தான அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு நாளை அதிகாலை பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையின் இரண்டாவது சம்மனுக்கும் ஆஜராகவில்லை. ஏற்கனவே அசோக் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த வாரமே அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களில் அசோக் இன்று ஆஜராகவில்லை. இது தொடர்பாக அவரது தரப்பில் 2 அலுவலகங்களிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்டவேண்டி இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்க்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் வருமானவரித் துறை சார்பிலும் மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.