இஸ்ரேலில் செவிலியர் தொழில் வாய்ப்பைப் பெற்ற 12 இலங்கையர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், மனுஷ நாணயக்காராவின் தலைமையில் கடந்த 16 ஆம் திகதி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் இடம்பெயர்வு அதிகாரசபை ஆகியவற்றுக்கு இடையில் 2020 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி, இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதுடன், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல், இதுவரையிலும் 384 இலங்கையர்களுக்கு இத்துறையில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் அரசும், இலங்கை அரசும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் மாத்திரமே இஸ்ரேலில் செவிலியர் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும். எனவே, இஸ்ரேலில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு வெளியாட்களுக்கும் பணம் அல்லது கடவுச் சீட்டுக்களை வழங்க வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.