முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய விமான நிலைய ஆணையம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் மிக முக்கிய நபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் Z ப்ளஸ் பாதுகாப்பு இருப்பவர்கள் இந்திய விமானத்துறை ஆணையத்தின் சிறப்பு அனுமதியை பெற்று, விமான பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது நேரடியாக விமானம் அருகே வந்து விமானத்தில் ஏறி பயணம் செய்யும் வகையில் சிறப்பு அனுமதியை பெறலாம்.
அந்த வகையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே Z பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் தற்போது விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது நேரடியாக விமானம் அருகே வரை காரில் சென்று அங்கிருந்து விமானத்தில் பயணிக்கவும், அதேபோன்று விமானத்தில் பயணித்த பிறகு விமான நிற்கும் இடம் வரை காரில் சென்று சிறப்பு நுழைவாயில் வழியாக வெளியேறும் வகையில் சிறப்பு அனுமதியை இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற எடப்பாடி பழனிச்சாமியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பேருந்தில் விமர்சனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.