புதுடெல்லி: கடந்த 1995-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சர்வதேச காந்தி அமைதி விருது மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1 கோடி ரொக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை அடங்கிய இந்த விருது, அகிம்சை உள்ளிட்ட காந்திய வழியில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு வழங்கப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் மத்தியில் சமூக மற்றும் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்த கடந்த 100 ஆண்டுகளில் கீதா பதிப்பகம் பாராட்டத்தக்க பணிகளை செய்துள்ளது. காந்தியின் லட்சியங்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றி உள்ளது” என கூறியுள்ளார்.
கோரக்பூரில் 1923-ம் ஆண்டு நிறுவப்பட்ட கீதா பதிப்பகம், இந்து மதம் தொடர்பான நூல்களை வெளியிடும் உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த பதிப்பகம் 41.7 கோடி புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இதில் 14 மொழிகளில் வெளியான பகவத் கீதையின் எண்ணிக்கை மட்டும் 16.21 கோடி ஆகும்.
கீதா பதிப்பக மேலாளர் லால் மணி திரிபாதி நேற்று கூறும்போது, “எங்கள் பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவம். இதற்காக பிரதமர் மோடிக்கும் கலாச்சார அமைச்சகத்துக்கும் நன்றி. அதேநேரம், நன்கொடை பெறுவதில்லை என்பது எங்கள் கொள்கை. எனவே, ரொக்கப் பரிசை ஏற்க வேண்டாம் என எங்கள் பதிப்பக அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், எங்களை கவுரவித்து வழங்கும் விருதை ஏற்றுக் கொள்வோம்” என்றார்.