எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் இன்று விடுமுறை? தமிழகத்தில் விட்டு விட்டு வெளுக்கும் மழை!

தமிழகத்தில் நேற்று இரவு பெரிய அளவில் மழை இல்லை. நேற்று முன்தினம் விடாமல் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 வட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் மாதம் மழை பெய்வதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கடைசியாக 1996ஆம் ஆண்டு ஜூனில் ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் மழை

சென்னையில் நேற்று பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 20) விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நீடித்தது. ஏனெனில் சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் காலைப் பொழுது விடிந்ததும் மழை விட்டது.

சென்னையில் விடுமுறை இல்லை

லேசான சாரல் மழையை மட்டும் பார்க்க முடிந்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் சில மணி நேரங்களில் வடிந்தது. தேவைப்படும் இடங்களில் மட்டும் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்றைய தினம் (ஜூன் 20) வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை முன்னறிவிப்பு

மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம். இதுதவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு நாட்கள்

நாளைய தினம் (ஜூன் 21) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியே பதிவாகும். அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.