ஏமாற்றம் தந்த ஜுன் 16 வெளியீட்டுத் திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் வாராவாரம் புதிய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஜுன் 16ம் தேதி, ‛பொம்மை, எறும்பு,' ஆகிய நேரடி தமிழ்ப் படங்களும், 'ஆதிபுருஷ், சார்லஸ் என்டர்பிரைசஸ்' ஆகிய டப்பிங் படங்களும் வெளிவந்தன.
இவற்றில் 'எறும்பு' படத்திற்கு மட்டும் சிறப்பான விமர்சனங்கள் கிடைத்தது. ஆனால், நட்சத்திர அந்தஸ்து இல்லாத சிறிய படம் என்பதால் தியேட்டர்களில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. 'பொம்மை' படத்தில் எஸ்ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க, தரமான சில படங்களைக் கொடுத்த ராதாமோகன் இயக்கியிருந்தாலும் படத்திற்கு நல்ல விமர்சனங்களும் கிடைக்கவில்லை, வரவேற்பும் கிடைக்கவில்லை. பல தியேட்டர்களில் பத்து பதினைந்து பேர் மட்டுமே வந்ததாகவும் சொல்கிறார்கள்.
'பான் இந்தியா' படமாக வெளியாக 300 கோடி வசூலை மூன்றே நாட்களில் பெற்ற 'ஆதிபுருஷ்' படத்திற்கு தமிழில் வரவேற்பு சுத்தமாக கிடைக்கவில்லை. மலையாளத்திலிருந்து டப்பிங் ஆகி வெளிவந்த 'சார்லஸ் எண்டர்பிரைசஸ்' படம் வந்ததே பலருக்குத் தெரியவில்லை. வசூல் ரீதியாக மிகப் பெரும் ஏமாற்றத்தை கடந்த வாரப் படங்கள் கொடுத்துள்ளன. இந்த வாரம் ஜுன் 23ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளன. அவையாவது தியேட்டர்களைக் காப்பாற்றுமா ?.