அங்காரா: பூகம்பத்தால் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பலிகொண்ட துருக்கி தற்போது தங்கள் நாட்டின் ஊழியர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்திருக்கிறது.
துருக்கியில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். முதல் முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 7.6 ஆக பதிவாகியிருந்தது. இதனையடுத்து ஒரு சில மணி நேரத்திற்கெல்லாம் 5 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
தொடக்கத்தில் உயிரிழப்பு குறைவாக தெரிந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. கடைசியாக துருக்கியில் 50 ஆயிரம் மக்களும், சிரியாவில் 9 ஆயிரம் பேரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. உயிரிழப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் வீடற்றவர்கள், படுகாயமடைந்தவர்கள், சொந்தங்களை இழந்தவர்கள் ஆகியோரின் துயரம் அனைவரையும் வாட்டி வதைத்தது.
நிலநடுக்கத்தால் 16 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் தரைமட்டமாகின. இன்னும் சில ஆயிரம் வீடுகள் வாழ்வதற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகளை உருவாக்க ரூ.82 ஆயிரம் கோடியும், தற்போதைய நிலையை மீண்டும் பழையபடி மாற்ற வேண்டும் எனில் ரூ.9.2 லட்சம் கோடியும் தேவைப்படுகிறது என அப்போது அரசு கணக்கிட்டிருந்தது. அதேபோல நிலநடுக்கத்தால் நாட்டின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.86 ஆயிரம் கோடி பாதிக்கப்பட்டது.
இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த துருக்கிக்கு உலக நாடுகள் உதவ முன்வந்தன. முடிந்த அளவுக்கு தங்களால் இயன்ற மருத்துவ வசதிகளையும், உணவு பொருட்களையும் அனுப்பி வைத்தன. இந்த உதவிகள் மூலமாக துருக்கி மெல்ல தன்னுடைய இயல்பு நிலையை நோக்கி நகர தொடங்கியது. ஏராளமான சவால்கள் துருக்கிக்கு காத்திருந்தன. இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக துருக்கி முன்னேற்றம் அடைந்துள்ளது. நிலநடுக்கம் சம்பவம் நடந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மக்களுக்கு வீடுகள் ஓரளவு கட்டி தரப்பட்டுள்ளன.
ஆனால் அதே நேரம் நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு போதுமான வருமானம் கூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். முதலில் மரண ஓரம், அதைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி, இப்போது பண வீக்கம் என தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து வரும் நிலையில் இதிலிருந்து மீள்வதற்காக சில திட்டங்களை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 11,402 லீராக்களாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முன்னர் இருந்த குறைந்தபட்ச ஊதியத்தை விட சுமார் 34 சதவிகிதம் அதிகமாகும். அதாவது அந்நாட்டில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்தபட்சமாக ரூ.40,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் நிலவும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என்று அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வேதாத் இசிகான் கூறியுள்ளார். இப்படி ஏற்கெனவே ஊதியம் ஒருமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ஐடியா நல்ல பலனை கொடுத்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.