காரைக்குடி: காரைக்குடியில் தந்தை செல்போனை பறித்துகொண்டதால் மாடியில் இருந்து குதித்த மாணவியை பெண் சிறப்பு எஸ்ஐ காப்பாற்றினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு மாடி வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரது மகள் காவியா ஸ்ரீ இந்தாண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்ல உள்ளார்.
இந்நிலையில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்தி வந்த காவியா ஸ்ரீயை, தந்தை ரவிச்சந்திரன் கண்டித்து, மொபைலையும் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவியா, வீட்டின் மொட்டை மாடிக்கு ஏறியவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக பெற்றோரை மிரட்டியுள்ளார். அங்கிருந்தோர் அவரிடம் பேசியும் கீழே இறங்க மறுத்துவிட்டார். பின்னர், அங்கு வந்த போலீஸார், தீயணைப்புத் துறையினர் பேசி பார்த்தும் பயனில்லை.
இதையடுத்து எதிர்ப்பையும்மீறி போலீஸார் அவரை காப்பாற்ற முயன்றபோது, காவியா கீழே குதிக்க முயன்றார். இதில் நிலை, தடுமாறி தடுப்புச் சுவற்றில் தொங்கினார். இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட பெண் சிறப்பு எஸ்ஐ அன்னக்கிளி, காவியாவை கெட்டியாக பிடித்து கொண்டார். தொடர்ந்து போலீஸார், தீயணைப்புத்துறையினர் அவரை காப்பாற்றினர். பின்னர் மாணவிக்கு அறிவுரைகள் கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் தற்கொலை முயற்சியால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.