தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். அப்போது, சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள கல்குவாரி மூலம் பாதிப்புகள் ஏற்படுவதாக சீமானிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்தனர்.
வடக்கு புதூரில் ஆனைகுளம் சாலையில் உள்ள கல்குவாரிக்கு சீமான் மற்றும் அவரது கட்சியினர் சென்றனர். அப்போது, கல் குவாரியின் கேட் மூடப்பட்டு இருந்தது. பணியில் இருந்தவரிடம் கேட்டை திறக்குமாறு கூறியுள்ளனர். பணியில் இருந்த வடக்கு புதூரைச் சேர்ந்த சண்முகசாமி என்பவர், உரிமையாளர் சொல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் அத்துமீறி கல் குவாரிக்குள் புகுந்ததாகவும், இதை தடுக்க முயன்ற தன்னை சிலர் தாக்கியதாகவும், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் சண்முகசாமி புகார் அளித்தார். சீமான் உட்பட 75 பேர் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியினர் கல் குவாரிக்குள் அத்துமீறி நுழையும் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.