கேதார்நாத்தில் சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை தூவிய பெண்: கோயில் நிர்வாகம் போலீஸில் புகார்

கேதார்நாத்: கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோயிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேதார்நாத் கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் யார் என தெரியவில்லை.

இதுகுறித்து கோயிலை நிர்வகிக்கும் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிவலிங்கத்தின் மீது ரூபாய் நோட்டுகள் தூவுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக கோயில் தலைவர் அஜேந்திர அஜய் காவல் துறையில் புகார் செய்துள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருடன் அஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசி உள்ளார்.

அப்போது, ரூபாய் நோட்டுகளை சிவலிங்கம் மீது தூவியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு கேதார்நாத் கோயில் குழு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.