புதுடெல்லி: ரவி சின்ஹாஇந்தியாவின் வெளி உளவு அமைப்பான ரா-வின் (RAW) அடுத்த தலைவராக சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரா அமைப்பின் தற்போதைய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமந்த் குமார் கோயல் பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் ‘ரா’ அமைப்பின் அடுத்த தலைவராக 1988-ம் ஆண்டு பேட்ச், சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரவி சின்ஹா தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ‘ரா’ அமைப்பின் அடுத்த தலைவராக அவர் 2 ஆண்டுகள் பணியாற்ற மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரவி சின்ஹா, டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர். உளவுத் தகவல் சேகரிப்பில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி பல உண்மைகளை கண்டறிய முக்கிய பங்காற்றி உள்ளார்.