புதுடெல்லி: சுற்றுச்சூழல் முன் அனுமதி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
வெள்ளியங்கிரி மலையில் 2006ம் ஆண்டு முதல் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமல் பல கட்டிடங்களை கட்டியதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக, நவம்பர் 19, 2021 அன்று ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஈஷா அறக்கட்டளை ICSE கல்வி வாரியத்துடன் இணைந்த ஆங்கில வழிக்கல்வியை வழங்கத் தொடங்கியுள்ளது. வெள்ளியங்கிரி மலையில் 48.3 ஹெக்டேர் பரப்பளவில் 1,25,849 சதுர மீட்டர் பரப்பளவு இடம் கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு புதிய திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, 28,279 சதுர மீட்டர் பரப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டது. மீதமுள்ள 91,519 சதுர மீட்டர்கள் அதன்பிறகு கட்டப்பட்டது. விதிகளின் படி கல்விக்காக பயன்படுத்தப்படும் கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வரும் நிலையில், ஈஷா அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என, கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது