ஈரோடு: மது குடிப்பவர்களால் கிடைக்கும் வருவாய், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், டாஸ்மாக்கில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது என வீட்டுவசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஏற்கெனவே ஆய்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. நான் இன்னும் அதுகுறித்து ஆய்வு செய்யவில்லை. அடுத்த 15 நாட்களில், டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தகவல் சொல்கிறேன்.
டாஸ்மாக் தொடர்பான குற்றச்சாட்டுகளை விளம்பரமாகக் கொண்டு போய் விட்டனர். ஆனால், விசாரித்து பார்த்தால், அவர்கள் சொல்லுமளவு குற்றச்சாட்டு இல்லை எனத் தெரிகிறது.
வேறு இடத்திற்கு போக கூடாது: டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி வியாபாரம் நடப்பதாக குற்றச்சாட்டு வருகிறது. காலையில் 12 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்கு பின்னரும் மது விற்பனை நடக்கிறது என்றால், அதற்கான சூழ்நிலை என்ன, அவர்கள் கடைகளுக்கு வருவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என யோசித்து, அதனைத் தடுக்க நடைமுறையில் என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகிறோம்.
இதனை ஒழுங்கு படுத்த வேண்டியது அரசின் கடமை. டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பெரிய வருமானம் வர வேண்டும் என்பதற்காக, மது விற்பனை குறித்து, அரசு இலக்கு நிர்ணயிக்க வில்லை. டாஸ்மாக் வருமானம் வேறு எங்கும் வழிமாறிச் சென்று விடக்கூடாது. அந்த வருவாய் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகத் தான், இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
மது அருந்த நினைப்பவர்கள் வேறு இடத்திற்கு போக கூடாது. இதில் நீதிமன்றமும் சில வழிகாட்டுதல்களைக் கொடுத் துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.