டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை கிங்ஸ் 2-வது வெற்றி

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட்

8 அணிகள் பங்கேற்றுள்ள டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 9-வது லீக்கில் நடப்பு சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கிங்சும், கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்த கோவை கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்டன் ஜெகதீசன் (4 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (6 ரன்) அடுத்தடுத்து வீழ்ந்தனர். இந்த வீழ்ச்சியில் இருந்து கில்லீஸ் அணியால் அவ்வளவு சீக்கிரத்தில் எழுச்சி பெற முடியவில்லை. பாபா அபராஜித் (12 ரன்), சஞ்சய் யாதவும் (2 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

ஒரு கட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து கடும் நெருக்கடியில் தவித்தது. இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு சசிதேவும், ஆல்-ரவுண்டர் ஹரிஷ்குமாரும் இணைந்து சரிவில் இருந்து ஓரளவுக்கு மீட்டனர். முகமதுவின் ஓவரில் இரு பிரமாதமான சிக்சர்களை விரட்டியடித்த ஹரிஷ்குமார் (32 ரன், 20 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த ஓவரில் கேட்ச் ஆனார். சசிதேவ் 23 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் ரோகித் (13 ரன்) இரு பவுண்டரி அடித்து ஸ்கோர் 120-ஐ தாண்ட வைத்து ஆறுதல் அளித்தார்.

கோவை வெற்றி

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. கோவை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் யுதீஷ்வரன் 3 விக்கெட்டும், சித்தார்த், ஷாருக்கான், முகமது, சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். கோவை பீல்டர்கள் 3-4 கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டனர். இல்லாவிட்டால் இதை விட குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தி இருப்பார்கள்.

பின்னர் சுலப இலக்கை நோக்கி களம் கண்ட கோவைக்கு சச்சினும், விக்கெட் கீப்பர் சுரேஷ்குமாரும் முதல் விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். சச்சினுக்கு (14 ரன்) பிறகு நுழைந்த சாய் சுதர்சனும், சுரேஷ் குமாரும் கைகோர்த்து வெற்றிப்பாதைக்கு வித்திட்டனர். சுரேஷ்குமார் தனது பங்குக்கு 47 ரன்கள் (34 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். மறுமுனையில் சாய் சுதர்சன் தொடர்ந்து 3-வது அரைசதத்தை நொறுக்கியதுடன் பவுண்டரி விளாசி இலக்கை எட்ட வைத்தார்.

கோவை அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 64 ரன்களுடனும் (43 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), ராம் அரவிந்த் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 3 விக்கெட் வீழ்த்திய யுதீஸ்வரன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

3-வது லீக்கில் ஆடிய கோவைக்கு இது 2-வது வெற்றியாகும். அதே சமயம் தனது முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த கில்லீசுக்கு இது முதலாவது தோல்வியாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.