புதுடெல்லி: அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24-க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், அவர் ட்விட்டர் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்கையும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது ஆகும்.
முன்னதாக, கடந்த 2015-ல் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் ஆலைக்கு சென்றிருந்தபோது பிரதமர் மோடி மஸ்கை சந்தித்திருந்தார். அப்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியிருக்கவில்லை.
டெஸ்லா இந்தியாவில் ஆலையை அமைக்க இடத்தை தீவிரமாக தேடி வரும் நிலையில், மஸ்க் உடனான பிரதமரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல் நேர்காணலின்போது இந்திய சந்தையில் கால் பதிக்க ஆர்வமாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதில் கூறுகையில், “நிச்சயமாக ஆர்வத்துடன் உள்ளேன். இந்த ஆண்டு இறுதிக்குள் டெஸ்லா தனது ஆலையை இந்தியாவில் திறப்பதற்கான இடத்தை இறுதி செய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, “ நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார துறையைச் சேர்ந்த நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது, அமெரிக்காவின் வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கும், சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மஸ்க் தவிர, எழுத்தாளரும், வானியற்பியல் நிபுணருமான நீல் டி கிராஸ் டைசன், பொருளாதார நிபுணர் பால் ரோமர், புள்ளியியல் நிபுணர் நிக்கோலஸ் நாசீம் தலேப், முதலீட்டாளர் ரே டாலியே ஆகியோரையும் பிரதமர்சந்திப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்திய-அமெரிக்க பாடகர் பாலு ஷா, எழுத்தாளரும் ஆய்வாளருமான ஜெப் ஸ்மித், முன்னாள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ப்ரோமான், தூதர் டேனியல் ரஸ்ஸல் மற்றும் பாதுகாப்பு நிபுணர் எல்பிரிட்ஜ் கோல்பி, மருத்துவரும் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் பீட்டர் அக்ரே, சுகாதார நிபுணர் டாக்டர் ஸ்டீபன் கிளாஸ்கோ மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும், கலைஞருமான சந்திரிகா டாண்டன் ஆகியோரும் பிரதமரின் சந்திப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.