தமிழகப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் PET என்றொரு பாடவேளை கால அட்டவணையில் கட்டாயம் இருக்கும். ஆனால் பெரும்பாலான நாட்களில் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாட ஆசிரியர்கள் எடுத்து கொள்வர். 10ஆம் வகுப்பு வரை தான் PET என்ற பாட வேளை இருக்கும். அதுவே 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சென்றுவிட்டால் அப்படி ஒரு பாட வேளையே இருக்காது.
மாணவர்களின் விளையாட்டு திறன்கள்
இது மாணவர்களின் விளையாட்டு திறன்களை வெளிக்கொண்டு வரவும், பட்டை தீட்டவும் வாய்ப்புகள் இல்லாமல் செய்துவிடும். மறுபுறம் சர்வதேச அளவில் இந்திய அணிக்கு பதக்கங்கள் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் PET பாடவேளையை மற்ற ஆசிரியர்கள் தான் கடன் வாங்க வேண்டுமா? மற்ற வகுப்புகளை ஏன் PET-க்கு கடன் கொடுக்கக் கூடாது என்ற கேள்வியை கேட்டு கவனம் ஈர்த்துள்ளார் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர்
.
தஞ்சாவூரில் பரிசு வழங்கும் விழா
முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகள் தமிழ் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான களங்கள் காத்திருக்கின்றன.
உடற்கல்வி பாடவேளை
பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக கணக்கு, அறிவியல் பாடவேளைகளை விளையாட்டிற்கு கடன் கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டதும் அங்கிருந்த மாணவ, மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் ஆசிரியர்களுக்கு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
அமைச்சரவை விரிவாக்கம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் புதிதாக உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அப்போது அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிலிருந்து அந்த துறை சார்ந்த நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஒடிசா சென்று ஹாக்கி உலகக்கோப்பை தொடரை நேரில் பார்வையிட்டார்.
சர்வதேச விளையாட்டு போட்டிகள்
மேலும் அம்மாநிலத்தில் விளையாட்டு துறை சார்ந்த அம்சங்களை அறிந்து கொண்டு வந்து, தமிழகத்திலும் கட்டமைப்பை மேம்படுத்த வழிவகுத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு மைதானங்களை கட்டமைக்கும் முயற்சியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுதவிர சர்வதேச அளவிலான விளையாட்டுகளை சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் நடத்தவும் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.