புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற 12ம் நூற்றாண்டை சேர்ந்த பூரி ஜெகன்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலமாக துவங்கியது. மூலம் ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் புதிதாக உருவாக்கப்பட்ட தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க பிரமாண்ட ரத யாத்திரை இன்று நடந்தது. இதில் ஒரே நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று ‛ஜெய் ஜெகன்நாத்’ கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தியாவில் புகழ்பெற்ற ரத யாத்திரையில் முதலிடத்தில் இருப்பவது பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை தான். ஒடிசா மாநிலத்தின் அழகிய கடற்கரை நகரான பூரியில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக ரத யாத்திரை நடக்கும்.
இந்த ரதயாத்திரை இந்தியா மட்டுமின்றி உலக புகழ்பெற்றது. இதனால் ரத யாத்திரையை காண இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ரத யாத்திரையின் சிறப்பு என்பது ஒரே நேரத்தில் 3 தேர்கள் பவனி வருவது தான்.
அதாவது கோவில் மூலவர் ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் வலம் வருவார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 தெய்வங்களுக்கும் தனித்தனியே தேர்கள் வடிவமைக்கப்படும். ஜெகன்நாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா என்ற பெயரிலான தேர்கள் பயன்படுத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பூரி ஜெகநாதர் கோவில் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கும் நிலையில் முதல்நாளான இன்று ரத யாத்திரை தொடங்கியது. அதன்படி மூலவர் ஜெகன்நாதர் 45 அடி உயர 16 சக்கர தேரிலும், சகோதரர் பாலபத்திரர் 44 அடி உயர 12 சக்கர தேரிலும், சகோதரி சுபத்ரா 43 அடி உயர தேரிலும் வலம் வந்தனர்.
இந்த ரத யாத்திரையை ஒடிசா ஆளுநர் கணேசி லால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பக்தர்கள் 3 தேரையும் வடம்பிடித்து இழுத்தனர். மேளதாளங்கள், பக்தர்களின் ஜெய் ஜெகன்நாத் கோஷங்களுக்கு நடுவே 3 தேர்களும் பவனி வந்தது. அதன்பிறகு 3 பேரும் 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்தை கோவிலான மவுசிமாவில் ஓய்வு எடுத்தனர்.
ஒடிசா மாநிலத்தில் தற்போது வெயில் கடுமையாக உள்ளது. அனல் காற்று வீசும் நிலையிலும் ரத யாத்திரையை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒடிசா, இந்தியாவின் பிற மாநிலங்கள் தவிர வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் பூரி நகரமே குலுங்கியது. இன்னும் 9 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையொட்டி இன்று காலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்து செய்தியை பகிர்ந்து இருந்தனர்.