திருவாரூர் தேர் என்றால் பேரழகு எனப் பலரும் சொல்வர். அத்தகைய சிறப்பு வாய்ந்த தேர் 40 ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்தது. இதனை நவீன தொழில்நுட்பத்துடன் ஓட வைத்து வரலாறு படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இவருக்கு அதே திருவாரூரில் சிறப்பு சேர்க்கும் வகையில் தேர் போன்ற வடிவில் பிரம்மாண்ட கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழையிலும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!
கலைஞர் கோட்டம்
கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
என்னென்ன சிறப்புகள்
இதில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள், அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், கலைஞர் அடைக்கப்பட்டிருந்த சிறை போன்ற கட்டமைப்புகள், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பும் வகையில் சிறிய திரை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
திறப்பு விழா ஏற்பாடுகள்
மேலும் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா இன்று (ஜூன் 20) மாலை 3.30 மணியளவில் நடைபெறும் எனவும், தமிழக முதலமைச்சர்
முன்னிலையில் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி திமுக உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
மு.க.ஸ்டாலின் அழைப்பு
அதில், ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவர் கலைஞரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்பு விழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் – அறம் காக்கும் அணிவகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர் என அழைப்பு விடுத்திருந்தார்.
சிறப்பு நிகழ்ச்சிகள்
இன்றைய திறப்பு விழாவில் தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்புரை ஆற்றுகிறார். கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிதிஷ் குமார் வருகை ரத்து
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.