“நான் படித்த மும்பை ஐஐடி-க்கு அர்ப்பணிப்பு…" ரூ.315 கோடி நன்கொடையளித்த நந்தன் நிலேகனி!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி மும்பை ஐஐடி-க்கு 315 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். முன்னாள் மாணவர் தான் பயின்ற நிறுவனத்திற்கு கொடுத்த பெரிய நன்கொடையாக இது கருதப்படுகிறது.

நந்தன் நிலேகனி

நந்தன் நிலேகனி ஐஐடி பாம்பேவில் 1973-ல் சேர்ந்து எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங் பயின்றார். அதன் பின் ஐஐடி பாம்பே அசோசியேஷன் உடன் இணைந்து பணியாற்றி வந்தவர், தனது 50 ஆண்டுக் கால பயணத்தை நிறைவு செய்வதை குறிப்பிடும் விதமாக பாம்பே ஐஐடி-க்கு 315 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

“மும்பை ஐஐடி எனது பயணத்தின் தொடக்கப்புள்ளி. என்னுடைய வாழ்வில் முக்கிய அடித்தளமாக அமைந்தது. நிறுவனத்துடனான என்னுடைய 50 வருடத் தொடர்பைக் கொண்டாடுகையில், அது முன்னோக்கி நகர்வதற்கும், அதன் எதிர்காலத்திற்கும் பங்களிப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்த நன்கொடை நிதி சார்ந்த பங்களிப்பு என்பதை விட அதிகம். எனக்கு அதிகம் கொடுத்த இடத்திற்கு நான் செய்யும் ஒரு மரியாதை. நாளை நம் உலகத்தை வடிவமைக்கும் மாணவர்களுக்கான ஓர் அர்ப்பணிப்பு’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர் 85 கோடியைப் மும்பை ஐஐடி-க்கு நன்கொடையாக வழங்கி இருந்தார். தற்போது 315 கோடி வழங்கி இருக்கிறார். நந்தன் நிலேகனி மும்பை ஐஐடி -க்கு மட்டும் மொத்தமாக 400 கோடி ரூபாயை வழங்கி உள்ளார். 

இதுகுறித்து மும்பை ஐஐடி-யின் இயக்குனர் மற்றும் பேராசிரியர் சுபாசிஸ் சௌத்ரி கூறுகையில், “எங்கள் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் நந்தன் நிலேகனி நிறுவனத்துடன் தனது பங்களிப்புகளைத் தொடர்வதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்கொடையானது ஐஐடி மும்பையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் மற்றும் உலகளாவிய தலைமைப் பாதையில் அதை உறுதியாக அமைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.