ராஞ்சி: ஜனநாயகத்தின் பொருட்டு பாஜகவை வேரோடு அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது. பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் கருதுகின்றன. என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமரவேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். அதற்காக கடந்த ஆண்டில் இருந்தே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மாநிலத்தில் உள்ள கட்சியினர் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க உள்ளனர். அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23ம் தேதியன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.
பாஜக கேள்வி: பாட்னா கூட்டம் குறித்து குறித்து பாஜகவின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார். எதிர்கட்சிகளில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில்அவர்களுக்கு இடையே உரசல் உள்ளது. இது அதிகாரம் தேடும் சுயநலவாதிகளின் கூட்டம். பிரதமர் மோடியை அவர்களால் தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதால், அவர்கள் அதை ஒன்றாக செய்ய முயற்சிக்கிறார்கள். இந்தியா நிலையான அரசாங்கத்தை விரும்புகிறது, ஒருவருக்கொருவர் சண்டையிடும் மக்கள் கூட்டத்தை அல்ல என்று கிண்டலடித்தார்.
டி.ராஜா: இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேசியுள்ளளார். இரண்டு நாள் ஜார்க்கண்ட் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டி.ராஜா பேட்டி அளித்தார். அப்போது, பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை கடுமையானதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது என்று கூறினார்.
பேசி முடிவு செய்வோம்: வேரோடு அகற்றுவோம்: ஜனநாயகத்தின் பொருட்டு பாஜகவை வேரோடு அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது. பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் கருதுகின்றன. இது அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக அல்ல ஆனால் அரசியலமைப்பு, ஜனநாயகம், தேசம் மற்றும் அதன் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அந்த புரிதல் வேகமெடுக்கிறது என்றும் தெரிவித்தார் டி.ராஜா.
தலைவர் யார்: குழுவின் தலைவர் யார் என்பது ஒரு பிரச்சினையே இல்லை, கட்சிகள் போதுமான அளவு முதிர்ச்சியடைந்துள்ளதால் எல்லாவற்றையும் கூட்டாக பேசி முடிவெடுக்கலாம். ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்ட போதும், வெற்றி பெற்ற பிறகு தலைமைத்துவக் கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் எங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் இருந்தன. பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் கூட விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிபந்தனை இல்லை: எந்த பிரச்சினையும் இல்லை. எல்லாம் சுமூகமாக நடந்தது, எல்லாம் கூட்டாக விவாதிக்கப்பட்டது. மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் ஒற்றுமைக்கு முன்நிபந்தனைகள் இல்லை. பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்கட்சிகளின் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் கலந்து கொள்ள உள்ளேன் என்றும் டி.ராஜா கூறியுள்ளார்.