கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ஏழாயிரம் சதுர அடியில், ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருவாரூர் தேரை குறிக்கின்ற வகையில் மேல் பகுதி தேர் வடிவில் அமைக்கப்பட்ட கோட்டத்துக்குள் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற முழு உருவச் சிலை, அவருடைய வாழ்க்கை வரலாற்றை உணர்த்துகின்ற புகைப்படங்கள், முத்துவேலர் பெயரிலான நூலகம் மற்றும் இரண்டு மண்டபங்கள் அமைந்திருக்கின்றன.
இன்று காலை மங்கள இசையுடன் தொடங்கிய விழா, கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம் எனத் தொடர்ந்தது. முதல்வர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா, உதயநிதி, செல்வி உள்ளிட்ட ஸ்டாலின் குடும்பத்தினர் பலரும் காலையியே வந்துவிட்டனர். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ அனைத்து வேலைகளையும் ஓடியாடி செய்தார்.
முதல்வர் பாதுகாப்புப் படையினர், லோக்கல் போலீஸாரை மேடை அருகில்கூட அனுமதிக்காமல் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவரால் வர முடியவில்லை. இந்த தகவல் மேடைக்கு அருகே இருந்த ஸ்டாலினிடம் சொல்லப்பட்டதும், சட்டென அவர் முகம் மாறி அப்செட் ஆனார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வருகிறார் என முதல்வரிடம் சொல்லப்பட்டது.
மதியம் நிகழ்ச்சிகள் முடிந்ததும் மதிய உணவை முடித்துக்கொண்டு திறப்பு விழாவுக்குத் தயாரானார்கள். முதல்வர் குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்வதற்காக கறுப்பு நிற கேரவன் ஒன்று மேடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதியம் சுமார் 2:45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் திருவாரூருக்கு வந்தார் தேஜஸ்வி யாதவ். அவருடன் சிவா எம்.பி-யும் ஒன்றாக வந்தது குறிப்பிடத்தக்கது.
டி.ஆர்.பாலு, உதயநிதி, அன்பில் மகேஸ் உள்ளிட்டவர்கள் புத்தகம் கொடுத்து தேஜஸ்வி யாதவை வரவேற்றனர். இதையடுத்து தேஜஸ்வியை வரவேற்பதற்காக அரை மணி நேரத்துக்கு மேலாக, கலைஞர் கோட்டத்தின் படியில் துர்கா ஸ்டாலின், செல்வி, கனிமொழி உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்தனர். உதயநிதியிடம் தம்ஸ் அப் காட்டிய ஸ்டாலின், அவர் காதருகே சென்று நீண்ட நேரம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து வந்த தேஜஸ்வி யாதவை வரவேற்று அழைத்துச் சென்ற ஸ்டாலின், தன் கரங்களால் ரிப்பன் வெட்டி கோட்டத்தைத் திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதி சிலை அருகே அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து முத்துவேலர் நூலகத்தை தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். பின்னர் அனைவரும் ஒன்றாக மேடைக்கு வந்தனர்.
தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்களுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செய்து நினைவு சின்னம் பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, தேஜஸ்வி யாதவ் பேசினார். பின்னர் நிதிஷ்குமார் அனுப்பிய உரையை சிவா எம்.பி வாசித்தார். இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “வான் புகழ் கொண்ட வள்ளுவருக்கு கோட்டம் கண்ட கலைஞருக்கு, திருவாரூரில் சிறப்பான முறையில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. திருவாரூர் மண்ணில் கலைஞருக்கு கோட்டம் கட்டியிருப்பதை மிகப் பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.
அண்ணாவை கலைஞர் சந்தித்தது இதே திருவாரூர் மண்ணில்தான். கலைஞர் தலைவராக உருவானவர் அல்ல, தலைவராவதற்காகவே பிறந்தவர். கலைஞர் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய வெற்றி தோல்விகளைக் கண்டிருக்கிறார். அவை அத்தனையும் சிரித்த முகத்தோடும் கருணை உள்ளத்தோடும் ஏற்றுக்கொண்ட என்னுடைய தாயார் தயாளு அம்மாள் அவர்களின் பெயரில் அமைந்திருக்கும் அறக்கட்டளையின் சார்பாக இந்த கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டிருப்பது, எனக்கு மிகப்பெரிய பெருமையாக உள்ளது.
இந்த கலைஞர் கோட்டம், கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையையும், திறமைகளையும் உள்ளடக்கிய ஒரு கருவூலமாகத் திகழ்கிறது. என்னுடைய தந்தை இறந்தபோது, நானும் என்னுடைய சகோதரி செல்வியும் சேர்ந்து இந்த இடத்தை வாங்கினோம். தொடர்ந்து என்னுடைய சகோதரி செல்வியும், அமைச்சர் எ.வ.வேலுவும் இந்தக் கோட்டம் அமைவதற்கான பணிகளை கண்ணும் கருத்துமாகப் பார்த்து செதுக்கினர். தமிழகத்தின் பல பகுதிகளில் போட்டியிட்டாலும் இறுதியாக அவர் வந்து நின்ற இடம் திருவாரூர்.
தேர் எப்படி வீதியெல்லாம் சுற்றிவிட்டு, நிலையடியை வந்து சேருமோ… அதேபோல்தான். நான் கலைஞர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை அவருக்குக் காணிக்கையாக்குகிறேன். நம் ஆட்சியில் எந்த ஒரு பிரச்னை வந்தாலும் தலைவர் இருந்திருந்தால் எப்படி கையாண்டிருப்பாரோ, அதே வழியில்தான் தீர்வு காண முயல்கிறேன். கலைஞர் கோட்டம் திறக்க வர முடியாத வருத்தத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என்னிடம் தொலைபேசி மூலமாகத் தெரிவித்தார்.
கலைஞரரால் உருவாக்கப்பட்ட பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் இந்திய நாட்டில் அதிகம். அவருடைய கோபாலபுர இல்லத்துக்கு வராத தலைவர்கள் கிடையாது. அந்த அளவுக்கு இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். இந்திய நாட்டினுடைய ஜனநாயகத்தை காக்கக்கூடிய மிகப்பெரிய பணியை பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கியிருக்கிறார். வரும் ஜூன் 23-ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கக்கூடிய போர்க்களத்தில் நானும் பங்கேற்கிறேன்.
ஜனநாயகம் என்பது வீட்டு விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ என்று சொன்னவர் கலைஞர். கடந்த பத்தாண்டுக்காலமாக மத்தியில ஆளக்கூடிய பா.ஜ.க சர்வாதிகாரம் என்கிற காட்டுத்தீபோல் பரவி வருகிறது. அதை அணைக்க வேண்டிய மிகப்பெரிய கடமை நமக்கு இருக்கிறது. காட்டுத்தீயை அணைக்கக் கூடிய முதல் விளக்காக பாட்னா நகரில் நடைபெறக்கூடிய கூட்டம் அமையும்.
ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். பா.ஜ.க-வை மீண்டும் ஆள விட்டால், தமிழ்நாடு என்கிற மாநிலமே இல்லாமல் போய்விடும். தமிழ்நாட்டில் எப்படி மதச்சார்பற்ற கூட்டணிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க-வை எதிர்க்கிறோமோ, அதேபோன்று இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். இந்திய அளவில் தி.மு.க மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாக வேண்டும், அத்தகைய பணிகளை நீங்கள் எல்லாம் முன்னெடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே, நாளையும் நமதே” என்றார்.