பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்..வெப்ப அலையிலும் கூடிய மக்கள் அலை..

பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கடும் வெப்ப அலையையும் மீறி குவிந்துள்ள பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா இன்று வலம் வருகின்றனர்.

பூரி ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம். இங்குள்ள ஜெகந்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் ரத யாத்திரையை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். இந்த ஆலயத்தில் மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் இந்த தேரில் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ஜகன்னாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய மூன்று பிரம்மாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 16 சக்கரங்களைக் கொண்ட தேரில் ஜெகந்நாதரும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள வண்ணமயமான ரத ராத்திரை நடைபெறுகிறது.

ஒடிசாவின் பூரி நகரில் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. 10 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள்.

மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டிச்சா கோயிலை சென்றடைந்ததும் ஜெகந்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவரை காண லட்சுமி தேவி குண்டிச்சா கோயிலுக்கு வருகை தருவார். அதைத் தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பின்னர் ஜெகந்நாதர் கோயிலை வந்தடைந்ததும் விழா நிறைவடைய உள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி இன்று முதல் 9ம் தேதி வரை திருவிழா நடைபெறும். அதன் தொடக்கமாக ஜூன் 20ஆம் தேதியான இன்றைய தினம் தேர் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகிறது. இந்த ரத யாத்திரை நாளில் ஒவ்வொரு ஆண்டும் உடன்பிறப்புகள், ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகியோர் தனித்தனியாக மூன்று ரதங்களில், பூரி நகரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு வேண்டிய வரம் அள்ளி தருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஓடிசா மாநிலத்தில் தற்போது வெயில் கடுமையாக உள்ளது. அனல் காற்று வீசும் நிலையிலும் ரத யாத்திரையை காண மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வெயிலின் கடுமையை கட்டுப்படுத்தும் வகையில் ரத யாத்திரை நடைபெறும் போது பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.