புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநில குகி பழங்குடியினரை பாதுகாக்க ராணுவத்தை அனுப்பக்கோரும் மனுவினை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள மணிப்பூர் பழங்குடினர் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சல்வ்ஸ், “உச்ச நீதிமன்றத்தில் மணிப்பூர் அரசு உத்தரவாதம் அளித்திருக்கும் போதிலும், மாநிலத்தில் கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. மாநில அரசின் வெற்று உத்தரவாதங்களை நம்ப வேண்டாம். மணிப்பூரில் உள்ள குகி பழங்குடியினரைக் காப்பாற்ற ராணுவத்தை அனுப்ப உத்தரவிடவேண்டும். இந்த மனுவினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மணிப்பூர் மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேலும், “மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே களத்தில் உள்ளனர். அவர்கள் தங்களால் முடிந்தவைகளை சிறப்பாக செய்துகொண்டு இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள், “இது முற்றிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சார்ந்தது. மாநிலத்திற்கு ராணுவத்தினை அனுப்பும்படி நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டிய அவசிமில்லை என்று நாங்கள் நம்புகிறோம். வழக்கினை ஜூலை 3ம் தேதிக்கு பட்டியலிடுகிறாம்” என தெரிவித்தனர்.
பின்னணி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 53 சதவீதம் இருக்குமு் மைத்தி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில்(எஸ்டி) சேர்க்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குகி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மைத்தி சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.