மன்னார்குடியில், உணவகம் ஒன்றில், மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில், கடையை சூறையாடிய 3 பேர் கும்பல், நீளமான அரிவாளால் வெட்டி, ரத்தக்களறியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் ஆயிரம் ரூபாய்க்காக, பல பேரின் பசியாற்றும் உணவுகளை கீழே தள்ளி நாசப்படுத்தி, அரிவாளை கொண்டு மிரட்டி ரத்த காயப்படுத்தி, 3 பேர் கும்பல் போட்ட வெறியாட்டத்தின் சிசிடிவி காட்சிகள் தான் இவை ……
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையில், சிங்கப்பூர் பரோட்டா கடை என்ற பெயரில், உணவகம் செயல்படுகிறது. திங்கட்கிழமை இரவு அந்த உணவகத்திற்கு வந்த 3 பேர் கும்பல், ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளது. அடிக்கடி மாமூல் கேட்டால் எப்படி கடையை நடத்துவது எனக்கூறி பணம் கொடுக்க மறுத்ததால், உணவக உரிமையாளர், ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் கடையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
அட்டாகாசத்திற்கு நடுவே அரிவாளுடன் பாய்ந்த ஒருவன், மிதமிஞ்சிய போதையில், கண்மண் தெரியாமல், கம்பு சுற்றுவது போல, நீளமான அரிவாளை சுற்றிக் கொண்டிருந்தான்….
பின்னர் ஒருவழியாக நிதானத்திற்கு வந்த அந்த நபர் ஒரு கட்டத்தில், சாம்பார் வாளியிடம் தனது வீரத்தைக் காட்டினான்… தொடர்ந்து, கடையில் உணவு வாங்க வந்த பெரியவரை, அரிவாளால் வெட்டி ரகளை செய்தான்
ஆயிரம் ரூபாய்க்காக, ஹோட்டலில் இருந்த உணவுகள் மற்றும் உணவு தயாரிப்பதற்கான பொருட்களை எல்லாம், கீழே இழுத்துப்போட்டும், தள்ளிவிட்டும் வீணாக்கிய அந்த கும்பல், அரிவாளை சுழற்றிக் கொண்டும், சாலையில் தேய்த்தபடியும் தப்பியோடினர்….
சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த போலீசார், 3 பேரையும் பிடித்துச் சென்ற நிலையில், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, 3 பேரும் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
மன்னார்குடியில் வ.உ.சி சாலை உட்பட பல்வேறு இடங்களில், உணவகம், மருந்தகம், மளிகைக்கடை மட்டுமின்றி பெட்டிக்கடைகளை கூட விட்டுவைக்காத இந்த கும்பல், தொடர்ந்து, மாமூல் கேட்டு மிரட்டி வருவதாக சொல்லப்படும் நிலையில், இந்த அடாவடி கும்பலை இரும்புக்கரம் கொண்டு போலீசார் ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு